தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3475

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர்.

(உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்.

(அவ்வுரையில்), ‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்’ என்று கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3475)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالُوا: وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ: إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.