தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3522

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

அபூதர் கிஃபாரீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி.

பாடம் : 11

ஸம்ஸம் (கிணற்றின்) சரிதை.

 அபூ ஜம்ரா (ரஹ்) அறிவித்தார்.

எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி), ‘அபூ தர் (ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?’ என்று கேட்க, நாங்கள், ‘சரி (அறிவியுங்கள்)’ என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

அபூ தர் (ரலி) (என்னிடம்) கூறினார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ‘ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், ‘நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா’ என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், ‘உன்னிடம் என்ன செய்தி உண்டு’ என்று கேட்டேன். ‘நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்’ என்றார்.

நான் அவரிடம், ‘போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை’ என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.

அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன்.

அப்போது அலீ (ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), ‘ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே’ என்று கேட்டார். நான், ‘ஆம்’ என்றேன். உடனே அவர்கள், ‘அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)’ என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை.

அப்போது அலீ (ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். ‘மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?’ என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். உடனே, அலீ (ரலி), ‘என்னுடன் நடங்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவ்வாறே செய்கிறேன்’ என்று கூறினார்கள்.

நான் அப்போது ‘இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்’ என்று கூறினார்கள்.

இறுதியில், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்  செல்ல, நானும் அவர்களுடன் சென்றேன். நான்  நபி (ஸல்)  அவர்களிடம், ‘எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்’ என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அபூ தர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா’ என்று கூறினார்கள். அதற்கு நான், ‘உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்’ என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன்.

அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், ‘குறைஷிக் குலத்தாரே!’ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ என்று சொன்னேன். உடனே, அவர்கள் ‘இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்’ என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன்.

அப்போது அப்பாஸ் (ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, ‘உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும், நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது!

(அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)’ என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், ‘இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்’ என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ் (ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ் (ரலி), ‘இது அபூ தர் (ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூ தருக்கு கருணை காட்டுவானாக!’ என்று கூறினார்கள்.
Book : 61

(புகாரி: 3522)

(بَاب قصَّة إسْلامُ أبي ذَرّ، رَضِي الله تَعَالَى عنهُ)

بَابُ قِصَّةِ زَمْزَمَ

 

حَدَّثَنَا زَيْدٌ هُوَ ابْنُ أَخْزَمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ، حَدَّثَنِي مُثَنَّى بْنُ سَعِيدٍ القَصِيرُ، قَالَ: حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، قَالَ

قَالَ لَنَا ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُخْبِرُكُمْ بِإِسْلاَمِ أَبِي ذَرٍّ؟ قَالَ: قُلْنَا بَلَى، قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: كُنْتُ رَجُلًا مِنْ غِفَارٍ، فَبَلَغَنَا أَنَّ رَجُلًا قَدْ خَرَجَ بِمَكَّةَ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَقُلْتُ لِأَخِي: انْطَلِقْ إِلَى هَذَا الرَّجُلِ كَلِّمْهُ وَأْتِنِي بِخَبَرِهِ، فَانْطَلَقَ فَلَقِيَهُ، ثُمَّ رَجَعَ، فَقُلْتُ مَا عِنْدَكَ؟ فَقَالَ: وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَأْمُرُ بِالخَيْرِ وَيَنْهَى عَنِ الشَّرِّ، فَقُلْتُ لَهُ: لَمْ تَشْفِنِي مِنَ الخَبَرِ، فَأَخَذْتُ جِرَابًا وَعَصًا، ثُمَّ أَقْبَلْتُ إِلَى مَكَّةَ، فَجَعَلْتُ لاَ أَعْرِفُهُ، وَأَكْرَهُ أَنْ أَسْأَلَ عَنْهُ، وَأَشْرَبُ مِنْ مَاءِ زَمْزَمَ وَأَكُونُ فِي المَسْجِدِ، قَالَ: فَمَرَّ بِي عَلِيٌّ فَقَالَ: كَأَنَّ الرَّجُلَ غَرِيبٌ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، قَالَ: فَانْطَلِقْ إِلَى المَنْزِلِ، قَالَ: فَانْطَلَقْتُ مَعَهُ، لاَ يَسْأَلُنِي عَنْ شَيْءٍ وَلاَ أُخْبِرُهُ، فَلَمَّا أَصْبَحْتُ غَدَوْتُ إِلَى المَسْجِدِ لِأَسْأَلَ عَنْهُ، وَلَيْسَ أَحَدٌ يُخْبِرُنِي عَنْهُ بِشَيْءٍ، قَالَ: فَمَرَّ بِي عَلِيٌّ، فَقَالَ: أَمَا نَالَ لِلرَّجُلِ يَعْرِفُ مَنْزِلَهُ بَعْدُ؟ قَالَ: قُلْتُ: لاَ، قَالَ: انْطَلِقْ مَعِي، قَالَ: فَقَالَ مَا أَمْرُكَ، وَمَا أَقْدَمَكَ هَذِهِ البَلْدَةَ؟ قَالَ: قُلْتُ لَهُ: إِنْ كَتَمْتَ عَلَيَّ أَخْبَرْتُكَ، قَالَ: فَإِنِّي أَفْعَلُ، قَالَ: قُلْتُ لَهُ: بَلَغَنَا أَنَّهُ قَدْ خَرَجَ هَا هُنَا رَجُلٌ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَأَرْسَلْتُ أَخِي لِيُكَلِّمَهُ، فَرَجَعَ وَلَمْ يَشْفِنِي مِنَ الخَبَرِ، فَأَرَدْتُ أَنْ أَلْقَاهُ، فَقَالَ لَهُ: أَمَا إِنَّكَ قَدْ رَشَدْتَ، هَذَا وَجْهِي إِلَيْهِ فَاتَّبِعْنِي، ادْخُلْ حَيْثُ أَدْخُلُ، فَإِنِّي إِنْ رَأَيْتُ أَحَدًا أَخَافُهُ عَلَيْكَ، قُمْتُ إِلَى الحَائِطِ كَأَنِّي أُصْلِحُ نَعْلِي وَامْضِ أَنْتَ، فَمَضَى وَمَضَيْتُ مَعَهُ، حَتَّى دَخَلَ وَدَخَلْتُ مَعَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: اعْرِضْ عَلَيَّ الإِسْلاَمَ، فَعَرَضَهُ فَأَسْلَمْتُ مَكَانِي، فَقَالَ لِي: «يَا أَبَا ذَرٍّ، اكْتُمْ هَذَا الأَمْرَ، وَارْجِعْ إِلَى بَلَدِكَ، فَإِذَا بَلَغَكَ ظُهُورُنَا فَأَقْبِلْ» فَقُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، لَأَصْرُخَنَّ بِهَا بَيْنَ أَظْهُرِهِمْ، فَجَاءَ إِلَى المَسْجِدِ وَقُرَيْشٌ فِيهِ، فَقَالَ: يَا مَعْشَرَ قُرَيْشٍ، إِنِّي أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَقَالُوا: قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ، فَقَامُوا فَضُرِبْتُ لِأَمُوتَ، فَأَدْرَكَنِي العَبَّاسُ فَأَكَبَّ عَلَيَّ، ثُمَّ أَقْبَلَ عَلَيْهِمْ، فَقَالَ: وَيْلَكُمْ، تَقْتُلُونَ رَجُلًا مِنْ غِفَارَ، وَمَتْجَرُكُمْ وَمَمَرُّكُمْ عَلَى غِفَارَ، فَأَقْلَعُوا عَنِّي، فَلَمَّا أَنْ أَصْبَحْتُ الغَدَ رَجَعْتُ، فَقُلْتُ مِثْلَ مَا قُلْتُ بِالأَمْسِ، فَقَالُوا: قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ فَصُنِعَ بِي مِثْلَ مَا صُنِعَ بِالأَمْسِ، وَأَدْرَكَنِي العَبَّاسُ فَأَكَبَّ عَلَيَّ، وَقَالَ مِثْلَ مَقَالَتِهِ بِالأَمْسِ، قَالَ: فَكَانَ هَذَا أَوَّلَ إِسْلاَمِ أَبِي ذَرٍّ رَحِمَهُ اللَّهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.