தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3668

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, ‘முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்’ அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே’ என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், ‘முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்’ என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) ‘பனூ சாஇதா’ சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம், ‘எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்’ என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)’ என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூ பக்ர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(ரலி) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்ர்(ரலி) மெளனமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்’ என்று கூறி வந்தார்கள்.
பிறகு, அபூ பக்ர்(ரலி) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், ‘(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்’ என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(ரலி), ‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும்ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘இல்லை’ நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், ‘ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்’ என்று கூறினார். அதற்கு உமர்(ரலி), ‘அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்’ என்று பதில் கூறினார்கள்.
Book :62

(புகாரி: 3668)

فَحَمِدَ اللَّهَ أَبُو بَكْرٍ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: أَلا مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ، وَقَالَ: {إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ} [الزمر: 30]، وَقَالَ: {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ} [آل عمران: 144]، قَالَ: فَنَشَجَ النَّاسُ يَبْكُونَ، قَالَ: وَاجْتَمَعَتِ الأَنْصَارُ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَقَالُوا: مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ، فَذَهَبَ إِلَيْهِمْ أَبُو بَكْرٍ، وَعُمَرُ بْنُ الخَطَّابِ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ، فَذَهَبَ عُمَرُ يَتَكَلَّمُ فَأَسْكَتَهُ أَبُو بَكْرٍ، وَكَانَ عُمَرُ يَقُولُ: وَاللَّهِ مَا أَرَدْتُ بِذَلِكَ إِلَّا أَنِّي قَدْ هَيَّأْتُ كَلاَمًا قَدْ أَعْجَبَنِي، خَشِيتُ أَنْ لاَ يَبْلُغَهُ أَبُو بَكْرٍ، ثُمَّ تَكَلَّمَ أَبُو بَكْرٍ فَتَكَلَّمَ أَبْلَغَ النَّاسِ، فَقَالَ فِي كَلاَمِهِ: نَحْنُ الأُمَرَاءُ وَأَنْتُمُ الوُزَرَاءُ، فَقَالَ حُبَابُ بْنُ المُنْذِرِ: لاَ وَاللَّهِ لاَ نَفْعَلُ، مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ، فَقَالَ أَبُو بَكْرٍ: لاَ، وَلَكِنَّا الأُمَرَاءُ، وَأَنْتُمُ الوُزَرَاءُ، هُمْ أَوْسَطُ العَرَبِ دَارًا، وَأَعْرَبُهُمْ أَحْسَابًا، فَبَايِعُوا عُمَرَ، أَوْ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ، فَقَالَ عُمَرُ: بَلْ نُبَايِعُكَ أَنْتَ، فَأَنْتَ سَيِّدُنَا، وَخَيْرُنَا، وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ عُمَرُ بِيَدِهِ فَبَايَعَهُ، وَبَايَعَهُ النَّاسُ، فَقَالَ قَائِلٌ: قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ، فَقَالَ عُمَرُ قَتَلَهُ اللَّهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.