தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3983

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அலீ(பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (கினாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)’ என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், ‘கடிதம் (எங்கே? அதை எடு)’ என்று கேட்டோம். அவள், ‘எம்மிடம் கடிதம் எதுவுமில்லை’ என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்’ என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்!’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்’ என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்’ என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), ‘இவர் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்’ என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’… அல்லது ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்’… என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள்.
Book :64

(புகாரி: 3983)

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا مَرْثَدٍ الغَنَوِيَّ، وَالزُّبَيْرَ بْنَ العَوَّامِ، وَكُلُّنَا فَارِسٌ، قَالَ: «انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا امْرَأَةً مِنَ المُشْرِكِينَ، مَعَهَا كِتَابٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى المُشْرِكِينَ» فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا، حَيْثُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَا: الكِتَابُ، فَقَالَتْ: مَا مَعَنَا كِتَابٌ، فَأَنَخْنَاهَا فَالْتَمَسْنَا فَلَمْ نَرَ كِتَابًا، فَقُلْنَا: مَا كَذَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَتُخْرِجِنَّ الكِتَابَ أَوْ لَنُجَرِّدَنَّكِ، فَلَمَّا رَأَتِ الجِدَّ أَهْوَتِ الى حُجْزَتِهَا، وَهِيَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ، فَأَخْرَجَتْهُ، فَانْطَلَقْنَا بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالمُؤْمِنِينَ، فَدَعْنِي  فَلِأَضْرِبَ عُنُقَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ» قَالَ حَاطِبٌ: وَاللَّهِ مَا بِي أَنْ لاَ أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ القَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي، وَلَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلَّا لَهُ هُنَاكَ مِنْ عَشِيرَتِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ وَلاَ تَقُولُوا لَهُ إِلَّا خَيْرًا» فَقَالَ عُمَرُ: إِنَّهُ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالمُؤْمِنِينَ، فَدَعْنِي فَلِأَضْرِبَ عُنُقَهُ، فَقَالَ: «أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ؟» فَقَالَ: ” لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ بَدْرٍ؟ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ، فَقَدْ وَجَبَتْ لَكُمُ الجَنَّةُ، أَوْ: فَقَدْ غَفَرْتُ لَكُمْ ” فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ، وَقَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.