தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4240 & 4241

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4240. & 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (‘நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்’ என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூ பக்ர்(ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர்(ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா(ரலி) பேசவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா(ரலி) உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா(ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ(ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ(ரலி) அவர்களே ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். ஃபாத்திமா(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) வாழ்ந்த வரையில் அலீ(ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா(ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ(ரலி) கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்) அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் – விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அலீ(ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. எனவே, ‘தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம்’ என்று கூறி அலீ(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்-ரலி – அவர்களுடன்) உமர்(ரலி) வருவதை அலீ(ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும. அப்போது உமர்(ரலி) (அபூ பக்ர் – ரலி – அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)’ என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்’ என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ(ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் – ரலி- அவர்களை நோக்கி) ‘தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கம் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கம் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்’ என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல்விட்டு விடவுமில்லை’ என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி), ‘தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும’ என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல் மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி – ஸல் – அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது’ என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) ‘நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்’ என்று கூறினர். தம் போக்கை அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
Book :64

(புகாரி: 4240 & 4241)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ

أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ، بِنْتَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْهِ بِالْمَدِينَةِ، وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي هَذَا المَالِ»، وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَالِهَا الَّتِي كَانَ عَلَيْهَا فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَبَى أَبُو بَكْرٍ أَنْ يَدْفَعَ إِلَى فَاطِمَةَ مِنْهَا شَيْئًا، فَوَجَدَتْ فَاطِمَةُ عَلَى أَبِي بَكْرٍ فِي ذَلِكَ، فَهَجَرَتْهُ فَلَمْ تُكَلِّمْهُ حَتَّى تُوُفِّيَتْ، وَعَاشَتْ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةَ أَشْهُرٍ، فَلَمَّا تُوُفِّيَتْ دَفَنَهَا زَوْجُهَا عَلِيٌّ لَيْلًا، وَلَمْ يُؤْذِنْ بِهَا أَبَا بَكْرٍ وَصَلَّى عَلَيْهَا، وَكَانَ لِعَلِيٍّ مِنَ النَّاسِ وَجْهٌ حَيَاةَ فَاطِمَةَ، فَلَمَّا تُوُفِّيَتِ اسْتَنْكَرَ عَلِيٌّ وُجُوهَ النَّاسِ، فَالْتَمَسَ مُصَالَحَةَ أَبِي بَكْرٍ وَمُبَايَعَتَهُ، وَلَمْ يَكُنْ يُبَايِعُ تِلْكَ الأَشْهُرَ، فَأَرْسَلَ إِلَى أَبِي بَكْرٍ: أَنِ ائْتِنَا وَلاَ يَأْتِنَا أَحَدٌ مَعَكَ، كَرَاهِيَةً لِمَحْضَرِ عُمَرَ، فَقَالَ عُمَرُ: لاَ وَاللَّهِ لاَ تَدْخُلُ عَلَيْهِمْ وَحْدَكَ، فَقَالَ أَبُو بَكْرٍ: وَمَا عَسَيْتَهُمْ أَنْ يَفْعَلُوا بِي، وَاللَّهِ لآتِيَنَّهُمْ، فَدَخَلَ عَلَيْهِمْ أَبُو بَكْرٍ، فَتَشَهَّدَ عَلِيٌّ، فَقَالَ: إِنَّا قَدْ عَرَفْنَا فَضْلَكَ وَمَا أَعْطَاكَ اللَّهُ ، وَلَمْ نَنْفَسْ عَلَيْكَ خَيْرًا سَاقَهُ اللَّهُ إِلَيْكَ، وَلَكِنَّكَ اسْتَبْدَدْتَ عَلَيْنَا بِالأَمْرِ، وَكُنَّا نَرَى لِقَرَابَتِنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصِيبًا، حَتَّى فَاضَتْ عَيْنَا أَبِي بَكْرٍ، فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي، وَأَمَّا الَّذِي شَجَرَ بَيْنِي وَبَيْنَكُمْ مِنْ هَذِهِ الأَمْوَالِ، فَلَمْ آلُ فِيهَا عَنِ الخَيْرِ، وَلَمْ أَتْرُكْ أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ فِيهَا إِلَّا صَنَعْتُهُ، فَقَالَ عَلِيٌّ لِأَبِي بَكْرٍ: مَوْعِدُكَ العَشِيَّةَ لِلْبَيْعَةِ، فَلَمَّا صَلَّى أَبُو بَكْرٍ الظُّهْرَ رَقِيَ عَلَى المِنْبَرِ، فَتَشَهَّدَ، وَذَكَرَ شَأْنَ عَلِيٍّ وَتَخَلُّفَهُ عَنِ البَيْعَةِ، وَعُذْرَهُ بِالَّذِي اعْتَذَرَ إِلَيْهِ، ثُمَّ اسْتَغْفَرَ وَتَشَهَّدَ عَلِيٌّ، فَعَظَّمَ حَقَّ أَبِي بَكْرٍ، وَحَدَّثَ: أَنَّهُ لَمْ يَحْمِلْهُ عَلَى الَّذِي صَنَعَ نَفَاسَةً عَلَى أَبِي بَكْرٍ، وَلاَ إِنْكَارًا لِلَّذِي فَضَّلَهُ اللَّهُ بِهِ، وَلَكِنَّا نَرَى لَنَا فِي هَذَا الأَمْرِ نَصِيبًا، فَاسْتَبَدَّ عَلَيْنَا، فَوَجَدْنَا فِي أَنْفُسِنَا، فَسُرَّ بِذَلِكَ المُسْلِمُونَ، وَقَالُوا: أَصَبْتَ، وَكَانَ المُسْلِمُونَ إِلَى عَلِيٍّ قَرِيبًا، حِينَ رَاجَعَ الأَمْرَ المَعْرُوفَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.