தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4581

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 திண்ணமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான் (எனும் 4:40ஆவது வசனத் தொடர்). அதாவது அணுவின் எடையளவு கூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ,பாவங்களுக்கான தண்டனையைக் கூட்டியோ) அநீதி இழைக்க மாட்டான்.
 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! (காண்பீர்கள்) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘மேகமே இல்லாத பெளர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொள்ளாதது போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்’ என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்.
மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் ‘ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் ‘யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை’ என்று கூறப்படும். மேலும், ‘இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கப்படும். அதற்கவர்கள் ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!’ என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக்கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, ‘நீங்கள் எதை வணங்கிக்கொண்டிருந்தீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) வணங்கிக்கொண்டிருந்தோம்’ என்று கூறுவர். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை’ என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்) அப்போது ‘எதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயம் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்கின்றனரே!’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான். அதற்கு அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்’ என்று இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ கூறுவர்.
Book : 65

(புகாரி: 4581)

بَابُ قَوْلِهِ: {إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ} [النساء: 40]

يَعْنِي زِنَةَ ذَرَّةٍ

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ أُنَاسًا فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ القِيَامَةِ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَعَمْ، هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ»، قَالُوا: لاَ، قَالَ «وَهَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ؟»: قَالُوا: لاَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَا تُضَارُونَ فِي رُؤْيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ القِيَامَةِ، إِلَّا كَمَا تُضَارُونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا، إِذَا كَانَ يَوْمُ القِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ، فَلاَ يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ مِنَ الأَصْنَامِ وَالأَنْصَابِ، إِلَّا يَتَسَاقَطُونَ فِي النَّارِ، حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ بَرٌّ أَوْ فَاجِرٌ، وَغُبَّرَاتُ أَهْلِ الكِتَابِ فَيُدْعَى اليَهُودُ فَيُقَالُ لَهُمْ: مَنْ كُنْتُمْ تَعْبُدُونَ؟ قَالُوا: كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ اللَّهِ فَيُقَالُ لَهُمْ: كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ، فَمَاذَا تَبْغُونَ؟ فَقَالُوا: عَطِشْنَا رَبَّنَا فَاسْقِنَا، فَيُشَارُ أَلاَ تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى النَّارِ كَأَنَّهَا سَرَابٌ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ، ثُمَّ يُدْعَى النَّصَارَى فَيُقَالُ لَهُمْ: مَنْ كُنْتُمْ تَعْبُدُونَ؟ قَالُوا: كُنَّا نَعْبُدُ المَسِيحَ ابْنَ اللَّهِ، فَيُقَالُ لَهُمْ: كَذَبْتُمْ، مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلاَ وَلَدٍ، فَيُقَالُ لَهُمْ: مَاذَا تَبْغُونَ؟ فَكَذَلِكَ مِثْلَ الأَوَّلِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ، أَوْ فَاجِرٍ، أَتَاهُمْ رَبُّ العَالَمِينَ فِي أَدْنَى صُورَةٍ مِنَ الَّتِي رَأَوْهُ فِيهَا، فَيُقَالُ: مَاذَا تَنْتَظِرُونَ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ، قَالُوا: فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا عَلَى أَفْقَرِ مَا كُنَّا إِلَيْهِمْ وَلَمْ نُصَاحِبْهُمْ، وَنَحْنُ نَنْتَظِرُ رَبَّنَا الَّذِي كُنَّا نَعْبُدُ، فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: لاَ نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا





மேலும் பார்க்க: முஸ்லிம்-302 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.