தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4679

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும்,நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார் எனும் (9:128ஆவது) இறைவசனம்.

 ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) – அன்னார் வேத அறிவிப்பினை (வஹீயை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’ என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்’ என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) ‘நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹீ (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்’ என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன்.

முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், பேரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.

(அவை:) ‘உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.’ (திருக்குர்ஆன் 09:128 , 129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், ‘(அவ்விரு வசனங்கள்) ‘குஸைமா'(ரலி) அல்லது ‘அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன’ என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 65

(புகாரி: 4679)

بَابُ قَوْلِهِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ، حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ} «مِنَ الرَّأْفَةِ»

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ

أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ – وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الوَحْيَ – قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ اليَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ عُمَرَ أَتَانِي، فَقَالَ: إِنَّ القَتْلَ قَدْ اسْتَحَرَّ يَوْمَ اليَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ القَتْلُ بِالقُرَّاءِ فِي المَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ القُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ القُرْآنَ “، قَالَ أَبُو بَكْرٍ: قُلْتُ لِعُمَرَ: «كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ عُمَرُ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِيهِ حَتَّى شَرَحَ اللَّهُ لِذَلِكَ صَدْرِي، وَرَأَيْتُ الَّذِي رَأَى عُمَرُ، قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: وَعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لاَ يَتَكَلَّمُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، وَلاَ نَتَّهِمُكَ، «كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ، فَوَاللَّهِ لَوْ كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَيَّ مِمَّا أَمَرَنِي بِهِ مِنْ جَمْعِ القُرْآنِ، قُلْتُ: «كَيْفَ تَفْعَلاَنِ شَيْئًا لَمْ يَفْعَلْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» فَقَالَ أَبُو بَكْرٍ: هُوَ وَاللَّهِ خَيْرٌ، فَلَمْ أَزَلْ أُرَاجِعُهُ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أَجْمَعُهُ مِنَ الرِّقَاعِ وَالأَكْتَافِ، وَالعُسُبِ وَصُدُورِ الرِّجَالِ، حَتَّى وَجَدْتُ مِنْ سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرِهِ، {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إِلَى آخِرِهِمَا، وَكَانَتِ الصُّحُفُ الَّتِي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ، وَاللَّيْثُ ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنْ ابْنِ شِهَابٍ، وَقَالَ: مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، وَقَالَ مُوسَى: عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، مَعَ أَبِي خُزَيْمَةَ، وَتَابَعَهُ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، وَقَالَ أَبُو ثَابِتٍ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ. وَقَالَ: مَعَ خُزَيْمَةَ أَوْ أَبِي خُزَيْمَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.