தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4757

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

இறை நம்பிக்கை கொண்டோரிடையே மானக் கேடான செயல் பரவிட வேண்டுமென யார் விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிகின்றான்; நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் உங்கள் மீது இல்லாதி ருந்து, அல்லாஹ் மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாய் இல்லாமலுமிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் (எனும் 24:19, 20 ஆகிய இறைவசனங்கள்). (24:19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) தஷீஅ எனும் சொல்லுக்கு வெளிப்படுவது என்று பொருள். உங்களில் செல்வமும் தயாளகுணமும் உள்ளவர்கள் (தங்களுடைய) உறவினர்க ளுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு வருத்தம் ஏதேனும் ஏற்பட்டி ருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப் போனும் கருணையுடையோனும் ஆவான் (எனும்24:22ஆவது இறைவசனம்).

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

என் தொடர்பாக அவதூறு பேசப்பட்டபோது எனக்க இன்னும் அது தெரிந்திராத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைத் தக்கபடி போற்றிவிட்டு, ‘என் மனைவியின் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களின் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்’ என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத் (ரலி) எழுந்து, ‘அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். ‘கஸ்ரஜ்’ குலத்தாரிடையேயிருந்து ஒருவர் எழுந்து, ‘பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்’ என்று கூறினார். ‘ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) ‘அவ்ஸ்’ குலத்தாருக்கும் ‘கஸ்ரஜ்’ குலத்தாருக்குமிடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும், கைகலப்பும் மூண்டுவிடப்பார்த்து. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.

அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரின் கால் (அவரின் கம்பளி அங்கியால்) இடறியது. அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் மெளனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?’ என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான் அவரை அதட்டினேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்’ என்று கூறினார். நான், ‘என்னுடைய எந்த விஷயத்திற்காக?’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், ‘இப்படியா நடந்தது?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்!’ அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)’ என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பது கூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்’ என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், ‘என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவிற்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் ‘என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன் மீது (பெரிதாக்கிக் கொள்ளாமல்) இலோசாக்கிக் கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பல பேர் இருக்க, அவர்கள் அவளின் மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறை கூறுவதும் இயல்பு தான்’ என்று கூறினார்கள். எனக்கு ஏற்பட்ட அளவிற்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் ‘என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?’ என்று கேட்டேன். தாயார் ‘ஆம்’ என்று கூறினார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு..?’ என்று கேட்டேன். ‘ஆம்’ அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூ பக்ர்(ரலி) வீட்டின் மேல் தளத்தில் ஒதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் ‘இவள் விஷயம் என்ன?’ என்று கேட்டார்கள். என் தாயார், ‘அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது’ என்று கூறினார். உடனே அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், ‘என் அன்பு மகளே! நீ என் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்’ என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப் பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவிற்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடமிருந்து) அறியவில்லை’ என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!’ என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமாறுவற்றதாகக் கருதுவோனோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்’ என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அன்னியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!’ என்று கூறினார். பிறகு அவர் இறைவழியில் வீரமரணம் அடைந்தார். என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப்பக்கமும், (மற்றவர்) என் இடப்பக்கமும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, போற்றிவிட்டு, ‘ஆயிஷா! நீ ‘தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்’ அல்லது ‘அநீதியிழைத்திருந்தால்’, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்’ என்று கூறினார்கள். அப்போது அன்சாரிப் பெண்யொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி(ஸல்) அவர்களிடம்,) ‘இந்தப் பெண் பெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?’ என்று கேட்டேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, ‘இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்’ என்றேன். அவர்கள் ‘நான் என்ன பதில் சொல்வது?’ என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, ‘இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!’ என்றேன். அவர்கள், ‘நான் என்ன சொல்வேன்?’ என்று கேட்டார்கள். அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழிகூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வலிவும் உயர்வும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான். -அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் – நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான் ‘தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்’ என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூஸுஃப்(அலை) அவர்களின் தந்தையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக காண்கிறேன்’ -அப்போது (யூஸுஃப் அவர்களின் தந்தை) யஅகூப்(அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால், நினைவுக்கு வரவில்லை. ‘(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே பாதுகாப்புக் கோருகிறேன்’ என யஅகூப்(அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.

அந்த நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது, (குர்ஆன்வசனங்கள்) அருளப்பெற்றன. எனவே, நாங்கள் மெளனமாக இருந்தோ. ‘வஹீ’ (வேத அறிவிப்பு அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், ‘ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்’ என்று கூறினார்கள். நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் ‘நீ எழுந்து நபி(ஸல்) அவர்களிடம் செல்!’ என்று கூறினர். அதற்கு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என் மீதான) அவதூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை’ என்று சொன்னேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

மேலும், ஆயிஷா(ரலி) (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தினால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்கு பெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே கூறினார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறுபேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்து போனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும் கூட.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி), ‘மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்’ என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் ‘உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்) ‘உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூ பக்ர்(ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். ‘மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூ பக்ர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்’ என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.

Book : 65

(புகாரி: 4757)

بَابُ {إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لاَ تَعْلَمُونَ، وَلَوْلاَ فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ اللَّهَ رَءُوفٌ رَحِيمٌ} {تَشِيعُ} [النور: 19]: «تَظْهَرُ»

وَقَوْلُهُ: {وَلاَ يَأْتَلِ أُولُو الفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي القُرْبَى وَالمَسَاكِينَ وَالمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ، وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ}

وَقَالَ أَبُو أُسَامَةَ: عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ

لَمَّا ذُكِرَ مِنْ شَأْنِي الَّذِي ذُكِرَ، وَمَا عَلِمْتُ بِهِ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيَّ خَطِيبًا، فَتَشَهَّدَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ أَشِيرُوا عَلَيَّ فِي أُنَاسٍ أَبَنُوا أَهْلِي، وَايْمُ اللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي مِنْ سُوءٍ، وَأَبَنُوهُمْ بِمَنْ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهِ مِنْ سُوءٍ قَطُّ، وَلاَ يَدْخُلُ بَيْتِي قَطُّ إِلَّا وَأَنَا حَاضِرٌ، وَلاَ غِبْتُ فِي سَفَرٍ إِلَّا غَابَ مَعِي»، فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ: ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ أَنْ نَضْرِبَ أَعْنَاقَهُمْ، وَقَامَ رَجُلٌ مِنْ بَنِي الخَزْرَجِ، وَكَانَتْ أُمُّ حَسَّانَ بْنِ ثَابِتٍ مِنْ رَهْطِ ذَلِكَ الرَّجُلِ، فَقَالَ: كَذَبْتَ أَمَا وَاللَّهِ أَنْ لَوْ كَانُوا مِنَ الأَوْسِ مَا أَحْبَبْتَ أَنْ تُضْرَبَ أَعْنَاقُهُمْ، حَتَّى كَادَ أَنْ يَكُونَ بَيْنَ الأَوْسِ وَالخَزْرَجِ شَرٌّ فِي المَسْجِدِ، وَمَا عَلِمْتُ فَلَمَّا كَانَ مَسَاءُ ذَلِكَ اليَوْمِ، خَرَجْتُ لِبَعْضِ حَاجَتِي، وَمَعِي أُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ، وَقَالَتْ: تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ: أَيْ أُمِّ تَسُبِّينَ ابْنَكِ؟ وَسَكَتَتْ ثُمَّ عَثَرَتِ الثَّانِيَةَ، فَقَالَتْ: تَعَسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا: أَيْ أُمِّ أَتَسُبِّينَ ابْنَكِ؟ فَسَكَتَتْ ثُمَّ عَثَرَتِ الثَّالِثَةَ، فَقَالَتْ: تَعَسَ مِسْطَحٌ فَانْتَهَرْتُهَا، فَقَالَتْ: وَاللَّهِ مَا أَسُبُّهُ إِلَّا فِيكِ، فَقُلْتُ فِي أَيِّ شَأْنِي؟ قَالَتْ: فَبَقَرَتْ لِي الحَدِيثَ، فَقُلْتُ: وَقَدْ كَانَ هَذَا، قَالَتْ: نَعَمْ، وَاللَّهِ فَرَجَعْتُ إِلَى بَيْتِي كَأَنَّ الَّذِي خَرَجْتُ لَهُ لاَ أَجِدُ مِنْهُ قَلِيلًا وَلاَ كَثِيرًا، وَوُعِكْتُ، فَقُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرْسِلْنِي إِلَى بَيْتِ أَبِي، فَأَرْسَلَ مَعِي الغُلاَمَ فَدَخَلْتُ الدَّارَ، فَوَجَدْتُ أُمَّ رُومَانَ فِي السُّفْلِ، وَأَبَا بَكْرٍ فَوْقَ البَيْتِ يَقْرَأُ، فَقَالَتْ أُمِّي: مَا جَاءَ بِكِ يَا بُنَيَّةُ؟ فَأَخْبَرْتُهَا وَذَكَرْتُ لَهَا الحَدِيثَ، وَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مِثْلَ مَا بَلَغَ مِنِّي، فَقَالَتْ: يَا بُنَيَّةُ، خَفِّفِي عَلَيْكِ الشَّأْنَ فَإِنَّهُ وَاللَّهِ لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ حَسْنَاءُ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا لَهَا ضَرَائِرُ إِلَّا حَسَدْنَهَا، وَقِيلَ فِيهَا: وَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي، قُلْتُ: وَقَدْ عَلِمَ بِهِ أَبِي؟ قَالَتْ: نَعَمْ، قُلْتُ: وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: نَعَمْ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَعْبَرْتُ وَبَكَيْتُ، فَسَمِعَ أَبُو بَكْرٍ صَوْتِي، وَهُوَ فَوْقَ البَيْتِ يَقْرَأُ، فَنَزَلَ فَقَالَ لِأُمِّي: مَا شَأْنُهَا؟ قَالَتْ: بَلَغَهَا الَّذِي ذُكِرَ مِنْ شَأْنِهَا، فَفَاضَتْ عَيْنَاهُ، قَالَ: أَقْسَمْتُ عَلَيْكِ أَيْ بُنَيَّةُ إِلَّا رَجَعْتِ إِلَى بَيْتِكِ فَرَجَعْتُ، وَلَقَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتِي فَسَأَلَ عَنِّي خَادِمَتِي، فَقَالَتْ: لاَ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا عَيْبًا إِلَّا أَنَّهَا كَانَتْ تَرْقُدُ حَتَّى تَدْخُلَ الشَّاةُ، فَتَأْكُلَ خَمِيرَهَا – أَوْ عَجِينَهَا – [ص:108] وَانْتَهَرَهَا بَعْضُ أَصْحَابِهِ، فَقَالَ: اصْدُقِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَسْقَطُوا لَهَا بِهِ، فَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلَّا مَا يَعْلَمُ الصَّائِغُ عَلَى تِبْرِ الذَّهَبِ الأَحْمَرِ، وَبَلَغَ الأَمْرُ إِلَى ذَلِكَ الرَّجُلِ الَّذِي قِيلَ لَهُ، فَقَالَ: سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ مَا كَشَفْتُ كَنَفَ أُنْثَى قَطُّ، قَالَتْ عَائِشَةُ: فَقُتِلَ شَهِيدًا فِي سَبِيلِ اللَّهِ، قَالَتْ: وَأَصْبَحَ أَبَوَايَ عِنْدِي، فَلَمْ يَزَالاَ حَتَّى دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ صَلَّى العَصْرَ، ثُمَّ دَخَلَ وَقَدْ اكْتَنَفَنِي أَبَوَايَ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، يَا عَائِشَةُ إِنْ كُنْتِ قَارَفْتِ سُوءًا أَوْ ظَلَمْتِ فَتُوبِي إِلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ يَقْبَلُ التَّوْبَةَ مِنْ عِبَادِهِ» قَالَتْ: وَقَدْ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَهِيَ جَالِسَةٌ بِالْبَابِ، فَقُلْتُ: أَلاَ تَسْتَحْيِ مِنْ هَذِهِ المَرْأَةِ، أَنْ تَذْكُرَ شَيْئًا، فَوَعَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَالْتَفَتُّ إِلَى أَبِي، فَقُلْتُ لَهُ: أَجِبْهُ، قَالَ: فَمَاذَا أَقُولُ؟ فَالْتَفَتُّ إِلَى أُمِّي، فَقُلْتُ: أَجِيبِيهِ، فَقَالَتْ: أَقُولُ مَاذَا؟ فَلَمَّا لَمْ يُجِيبَاهُ تَشَهَّدْتُ فَحَمِدْتُ اللَّهَ وَأَثْنَيْتُ عَلَيْهِ، بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قُلْتُ: أَمَّا بَعْدُ فَوَاللَّهِ لَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي لَمْ أَفْعَلْ، وَاللَّهُ عَزَّ وَجَلَّ يَشْهَدُ إِنِّي لَصَادِقَةٌ، مَا ذَاكَ بِنَافِعِي عِنْدَكُمْ، لَقَدْ تَكَلَّمْتُمْ بِهِ وَأُشْرِبَتْهُ قُلُوبُكُمْ، وَإِنْ قُلْتُ إِنِّي قَدْ فَعَلْتُ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي لَمْ أَفْعَلْ لَتَقُولُنَّ قَدْ بَاءَتْ بِهِ عَلَى نَفْسِهَا، وَإِنِّي وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلًا، وَالتَمَسْتُ اسْمَ يَعْقُوبَ فَلَمْ أَقْدِرْ عَلَيْهِ إِلَّا أَبَا يُوسُفَ حِينَ قَالَ: {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} [يوسف: 18]، وَأُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَاعَتِهِ فَسَكَتْنَا فَرُفِعَ عَنْهُ، وَإِنِّي لَأَتَبَيَّنُ السُّرُورَ فِي وَجْهِهِ، وَهُوَ يَمْسَحُ جَبِينَهُ، وَيَقُولُ: «أَبْشِرِي يَا عَائِشَةُ، فَقَدْ أَنْزَلَ اللَّهُ بَرَاءَتَكِ»، قَالَتْ: وَكُنْتُ أَشَدَّ مَا كُنْتُ غَضَبًا، فَقَالَ لِي أَبَوَايَ: قُومِي إِلَيْهِ، فَقُلْتُ: لاَ وَاللَّهِ لاَ أَقُومُ إِلَيْهِ، وَلاَ أَحْمَدُهُ وَلاَ أَحْمَدُكُمَا، وَلَكِنْ أَحْمَدُ اللَّهَ الَّذِي أَنْزَلَ بَرَاءَتِي، لَقَدْ سَمِعْتُمُوهُ فَمَا أَنْكَرْتُمُوهُ وَلاَ غَيَّرْتُمُوهُ، وَكَانَتْ عَائِشَةُ تَقُولُ: أَمَّا زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ فَعَصَمَهَا اللَّهُ بِدِينِهَا، فَلَمْ تَقُلْ إِلَّا خَيْرًا، وَأَمَّا أُخْتُهَا حَمْنَةُ فَهَلَكَتْ فِيمَنْ هَلَكَ، وَكَانَ الَّذِي يَتَكَلَّمُ فِيهِ مِسْطَحٌ وَحَسَّانُ بْنُ ثَابِتٍ وَالمُنَافِقُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ وَهُوَ الَّذِي كَانَ يَسْتَوْشِيهِ وَيَجْمَعُهُ، وَهُوَ الَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ، هُوَ وَحَمْنَةُ قَالَتْ: فَحَلَفَ أَبُو بَكْرٍ أَنْ لاَ يَنْفَعَ مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلاَ يَأْتَلِ أُولُو الفَضْلِ مِنْكُمْ} إِلَى آخِرِ الآيَةِ – يَعْنِي أَبَا بَكْرٍ – {وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي القُرْبَى وَالمَسَاكِينَ} [النور: 22]: يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْلِهِ: {أَلاَ تُحِبُّونَ [ص:109] أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ} [النور: 22] حَتَّى قَالَ أَبُو بَكْرٍ: بَلَى وَاللَّهِ يَا رَبَّنَا، إِنَّا لَنُحِبُّ أَنْ تَغْفِرَ لَنَا، وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَعُ


Bukhari-Tamil-4757.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4757.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.