தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5611

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 சுவை நீரைத் தேடுவது

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) ஏராளமான பேரீச்ச மரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். ‘அவரின் செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 03:92 வது) வசனம் அருளப்பெற்றதும் அபூ தல்ஹா(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நல்லது. அது ‘(மறுமையில் இலாபம் தரும் செல்வம்தானே!’ அல்லது ‘(அழிந்து) போய்விடும் செல்வம்தானே!’ என்று கூறினார்கள் – அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவித்தார்.

(தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், ‘தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியேற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (பொறுத்தமாகக்) கருதுகிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு அபூ தல்ஹா(ரலி), ‘(அவ்வாறே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!’ எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இஸ்மாயீல் இப்னு அபீ உவைஸ்(ரஹ்) அவர்களும் யஹ்யா இப்னு யஹ்யா(ரஹ்) அவர்களும் ‘(அழிந்து) போய்விடும் செல்வம் தானே!’ என்றே அறிவித்தார்கள்.

Book : 74

(புகாரி: 5611)

بَابُ اسْتِعْذَابِ المَاءِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ

كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ مَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَ المَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، قَالَ أَنَسٌ: فَلَمَّا نَزَلَتْ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] قَامَ أَبُو طَلْحَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ مَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَخٍ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، أَوْ رَايِحٌ – شَكَّ عَبْدُ اللَّهِ – وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ» فَقَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَفِي بَنِي عَمِّهِ وَقَالَ إِسْمَاعِيلُ، وَيَحْيَى بْنُ يَحْيَى: «رَايِحٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.