தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6148

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


 ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சொன்று கொண்டிருந்தபோது மக்களிடையேயிருந்த ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், ‘உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார்.

ஆமிர்(ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள்.

‘இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்; தர்மம் செய்திருக்கவுமாட்டோம்; தொழுதிருக்கவுமாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம்; உன் வழியைப் பின்பற்றும் வரை எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க்களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம். எங்களிடம் மக்கள் (அபயக்) குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)’ என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.)

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘யார் இந்த ஒட்டகவோட்டி?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆமிர் இப்னு அக்வஃ’ என்று பதிலளித்தனர். அப்போது, ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) ஒருவர், ‘இறைத்தூதரே! (ஆமிருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார்.

பிறகு, நாங்கள் கைபருக்கு வந்து கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கெதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றியளித்தான். அவர்கள் வெற்றி கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் மக்கள் (ஆங்காங்கே) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இது என்ன நெருப்பு?’ எதற்காக (இதை மூட்டியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘இறைச்சி சமைப்பதற்காக’ என்று மக்கள் பதிலளித்தனர்.

‘எந்த இறைச்சி?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நாட்டுக் கழுதைகளின் இறைச்சி’ என்று மக்கள் கூறினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் கழுவி (வைத்து)க் கொள்ளலாமா?’ என்று கேட்டார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர்(ரலி) அவர்களின் வாள் குட்டையானதாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனை வெட்டப் போனபோது அன்னாரின் வாளின் மேற்பகுதி அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபரை வென்று, மதீனா நோக்கி) மக்கள் திரும்பியபோது (நிகழ்ந்தவற்றை) ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(கவலையினால்) நிறம் மாறிப்போயிருந்த என்னைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தம் வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார்) என மக்கள் கூறுகிறார்கள்’ என்று சொன்னேன். அதற்கு (நபி(ஸல்) அவர்கள் ‘யார் இதைச் சொன்னவர்?’ என்று கேட்டார்கள். ‘இதை இன்னாரும் இன்னாரும் உசைத் இப்னு ஹுளர் அல் அன்சாரி அவர்களும் கூறினர்’ என்றேன். (இதை கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, புனிதப் போரில் பங்குகொண்ட நன்மையென) இரண்டு நன்மைகள் உண்டு’ என்று கூறியவாறு தம்மிரு விரல்களையும் அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) ‘அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) புனிதப் போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்த) இவரைப் போன்ற அரபிகள் பூமியின் பிறப்பது அரிது’ என்றார்கள்.

Book :78

(புகாரி: 6148)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَسِرْنَا لَيْلًا، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ لِعَامِرِ بْنِ الأَكْوَعِ: أَلاَ تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ؟ قَالَ: وَكَانَ عَامِرٌ رَجُلًا شَاعِرًا، فَنَزَلَ يَحْدُو بِالقَوْمِ يَقُولُ:
[البحر الرجز]
اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا … وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا
فَاغْفِرْ فِدَاءٌ لَكَ مَا اقْتَفَيْنَا … وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
وَأَلْقِيَنْ سَكِينَةً عَلَيْنَا … إِنَّا إِذَا صِيحَ بِنَا أَتَيْنَا
وَبِالصِّيَاحِ عَوَّلُوا عَلَيْنَا
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا السَّائِقُ» قَالُوا: عَامِرُ بْنُ الأَكْوَعِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ» فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: وَجَبَتْ يَا نَبِيَّ اللَّهِ، لَوْلاَ أَمْتَعْتَنَا بِهِ، قَالَ: فَأَتَيْنَا خَيْبَرَ فَحَاصَرْنَاهُمْ، حَتَّى أَصَابَتْنَا مَخْمَصَةٌ شَدِيدَةٌ، ثُمَّ إِنَّ اللَّهَ فَتَحَهَا عَلَيْهِمْ، فَلَمَّا أَمْسَى النَّاسُ اليَوْمَ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ، أَوْقَدُوا نِيرَانًا كَثِيرَةً، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذِهِ النِّيرَانُ، عَلَى أَيِّ شَيْءٍ تُوقِدُونَ» قَالُوا: عَلَى لَحْمٍ، قَالَ: «عَلَى أَيِّ لَحْمٍ؟» قَالُوا: عَلَى لَحْمِ حُمُرٍ إِنْسِيَّةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْرِقُوهَا وَاكْسِرُوهَا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَوْ نُهَرِيقُهَا وَنَغْسِلُهَا؟ قَالَ: «أَوْ ذَاكَ» فَلَمَّا تَصَافَّ القَوْمُ، كَانَ سَيْفُ عَامِرٍ فِيهِ قِصَرٌ، فَتَنَاوَلَ بِهِ يَهُودِيًّا لِيَضْرِبَهُ، وَيَرْجِعُ ذُبَابُ سَيْفِهِ، فَأَصَابَ رُكْبَةَ عَامِرٍ فَمَاتَ مِنْهُ، فَلَمَّا قَفَلُوا قَالَ سَلَمَةُ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاحِبًا، فَقَالَ لِي: «مَا لَكَ» فَقُلْتُ: فِدًى لَكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، قَالَ: «مَنْ قَالَهُ؟» قُلْتُ: قَالَهُ فُلاَنٌ وَفُلاَنٌ وَفُلاَنٌ وَأُسَيْدُ بْنُ الحُضَيْرِ الأَنْصَارِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ مَنْ قَالَهُ، إِنَّ لَهُ لَأَجْرَيْنِ – وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ – إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، قَلَّ عَرَبِيٌّ نَشَأَ بِهَا مِثْلَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.