தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7046

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 கனவுக்கு விளக்கம் அளித்த முதல் நபர் தவறாக விளக்கம் சொன்னாலும் அது தான் விளக்கம் என்பதை ஏற்க முடியாது.63

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது’ என்றார்.

அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்றார்கள்.

அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்’ என்று கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்’ என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)’ என்றார்கள்.64

Book : 91

(புகாரி: 7046)

بَابُ مَنْ لَمْ يَرَ الرُّؤْيَا لِأَوَّلِ عَابِرٍ إِذَا لَمْ يُصِبْ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يُحَدِّثُ

أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ فِي المَنَامِ ظُلَّةً تَنْطُفُ السَّمْنَ وَالعَسَلَ، فَأَرَى النَّاسَ يَتَكَفَّفُونَ مِنْهَا، فَالْمُسْتَكْثِرُ وَالمُسْتَقِلُّ، وَإِذَا سَبَبٌ وَاصِلٌ مِنَ الأَرْضِ إِلَى السَّمَاءِ، فَأَرَاكَ أَخَذْتَ بِهِ فَعَلَوْتَ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَعَلاَ بِهِ، ثُمَّ أَخَذَ بِهِ رَجُلٌ آخَرُ فَانْقَطَعَ ثُمَّ وُصِلَ. فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ، وَاللَّهِ لَتَدَعَنِّي فَأَعْبُرَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:44]: «اعْبُرْهَا» قَالَ: أَمَّا الظُّلَّةُ فَالإِسْلاَمُ، وَأَمَّا الَّذِي يَنْطُفُ مِنَ العَسَلِ وَالسَّمْنِ فَالقُرْآنُ، حَلاَوَتُهُ تَنْطُفُ، فَالْمُسْتَكْثِرُ مِنَ القُرْآنِ وَالمُسْتَقِلُّ، وَأَمَّا السَّبَبُ الوَاصِلُ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ فَالحَقُّ الَّذِي أَنْتَ عَلَيْهِ، تَأْخُذُ بِهِ فَيُعْلِيكَ اللَّهُ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ مِنْ بَعْدِكَ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُ بِهِ رَجُلٌ آخَرُ فَيَعْلُو بِهِ، ثُمَّ يَأْخُذُهُ رَجُلٌ آخَرُ فَيَنْقَطِعُ بِهِ، ثُمَّ يُوَصَّلُ لَهُ فَيَعْلُو بِهِ، فَأَخْبِرْنِي يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ، أَصَبْتُ أَمْ أَخْطَأْتُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا» قَالَ: فَوَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَتُحَدِّثَنِّي بِالَّذِي أَخْطَأْتُ، قَالَ: «لاَ تُقْسِمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.