தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7517

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒரு நாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா(ரலி), முஹம்மத்(ஸல்), ஜஅஃபர்(ரலி) ஆகியோரை நோக்கி) ‘இவர்களில் அவர் (முஹம்மத் – ஸல்) யார்?’ என்று கேட்டதற்கு நடுவிலிருந்த(வான)வர் ‘இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்’ என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், ‘இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்’ என்று கூறினார். அன்றிரவு இவ்வளவு தான் நடந்தது. அடுத்த(நாள்) இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் (-உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கமாட்டா. பிறகு அந்த வானவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து ஸம்ஸம் கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஏற்றார்கள்.158

அவர் நபி(ஸல்) அவர்களின் காறையெலும்பிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றிலிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தம் கையால் நபியவர்களின் இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி, அவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதனை நபியவர்களின் இருதயத்திலும் தொண்டை நாளங்களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், ‘யார் அவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் வந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னுடனிருப்பவர் முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) ‘ஆம்’ என்றார்கள். ‘அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!’ என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.

அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, ‘அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே ‘ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன நதி ஜிப்ரீலே?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். அப்போது அவரிடம் முதல் வானத்திலிருந்த வானவர்கள் கேட்டதைப் போன்றே (இந்த வானத்திலிருந்த) வானவர்களும், ‘யார் அவர்?’ என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார்கள். வானவர்கள், ‘உம்முடன் இருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள்’ என்று பதிலளித்தார்கள். ‘அவருக்கு ஆளனுப்பப்பட்டிருந்ததா?’ என்று வானவர்கள் கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். அப்போது அவ்வானவர்கள், ‘அவரின் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துகள்’ என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அ(வ்வானத்திலிருந்த வான)வர்களும் முதலாவது மற்றும் இரண்டாவது வானதிலிருந்தவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார்கள். அங்கிருந்த (வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஐந்தாம் வானிற்கு உயர்ந்தார்கள். அ(ங்கிருந்த வான)வர்களும் அதைப் போன்றே கூறினர். பின்னர் நபியவர்களுடன் ஆறாம் வானிற்கு உயர்ந்தார்கள். அவர்களும் அவ்வாறே கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஏழாம் வானிற்கு உயர்ந்தார்கள். அப்போது அங்கிருந்த(வான)வர்களும் அவரிடம் முன்போன்றே கூறினர்.

ஒவ்வொரு வானத்திலும் இறைத்தூதர்கள் இருந்ததாகக் கூறிய நபி(ஸல்) அவர்கள் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்கள். இத்ரீஸ்(அலை) அவர்கள் இரண்டாம் வானிலும், ஹாரூன்(அலை) அவர்கள் நான்காம் வானிலும், இன்னொருவர் ஐந்தாம் வானிலும், அவரின் பெயர் நினைவில்லை – இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆறாம் வானிலும் மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்வுடன் உரையாடியவர் என்ற சிறப்பினடிப்படையில் ஏழாம் வானிலும் இருந்ததாக நான் மனனமிட்டுள்ளேன். அப்போது மூஸா(அலை) அவர்கள், ‘என் இறைவா! எனக்கு மேலே வேறொருவர் உயர்த்தப்படுவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை’ என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிபரீல் அதற்கு மேலேயும் ஏறினார். அல்லாஹ்வுக்கு மட்டுமே அதன் நிலை தெரியும். இறுதியாக (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’விற்குச் சென்றார்கள். அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது’ என்பதும் அடங்கும். பிறகு நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா(அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா(அலை) அவர்கள், ‘முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?’ என்று கேட்டான்.

நபி(ஸல்) அவர்கள், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்’ என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

‘நீர் விரும்பினால் ஆகட்டும்’ என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள்.

எனவே, நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் நாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது’ என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி(ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா(அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியதுழூ ஐந்துக்கு வந்த போதும் மூஸா(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு அல்லாஹ், ‘(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள், மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அப்போது ‘என்ன செய்தீர்?’ என்று மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதைப்போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்’ என்றார்கள்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைவிடக் குறைவான எண்ணிக்கையையே பனூ இஸ்ராயீல்களுக்கு நான் (இறைவனிடம்) கோரிப் பெற்றேன். அப்படியிருந்தும் அதைக் கூட அவர்கள் கைவிட்டார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் உங்களுக்காகக் குறைக்கும்படி கேளுங்கள்’ என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மூஸாவே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திரும்பத் திரும்ப இறைவனிடம் நான் சென்றுவிட்டதனால் (மீண்டும் செல்ல) வெட்கப்படுகிறேன்’ என்றார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘(நபியே!) அல்லாஹ்வின் திருப்பெயரால் (பூமிக்கு) இறங்குங்கள்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள்; மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலில் இருந்தார்கள்.159

Book :97

(புகாரி: 7517)

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ

لَيْلَةَ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الكَعْبَةِ، أَنَّهُ جَاءَهُ ثَلاَثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ وَهُوَ نَائِمٌ فِي المَسْجِدِ الحَرَامِ، فَقَالَ أَوَّلُهُمْ: أَيُّهُمْ هُوَ؟ فَقَالَ أَوْسَطُهُمْ: هُوَ خَيْرُهُمْ، فَقَالَ آخِرُهُمْ: خُذُوا خَيْرَهُمْ، فَكَانَتْ تِلْكَ اللَّيْلَةَ، فَلَمْ يَرَهُمْ حَتَّى أَتَوْهُ لَيْلَةً أُخْرَى، فِيمَا يَرَى قَلْبُهُ، وَتَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ، وَكَذَلِكَ الأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلاَ تَنَامُ قُلُوبُهُمْ، فَلَمْ يُكَلِّمُوهُ حَتَّى احْتَمَلُوهُ، فَوَضَعُوهُ عِنْدَ بِئْرِ زَمْزَمَ، فَتَوَلَّاهُ مِنْهُمْ جِبْرِيلُ، فَشَقَّ جِبْرِيلُ مَا بَيْنَ نَحْرِهِ إِلَى لَبَّتِهِ حَتَّى فَرَغَ مِنْ صَدْرِهِ وَجَوْفِهِ، فَغَسَلَهُ مِنْ مَاءِ زَمْزَمَ بِيَدِهِ، حَتَّى أَنْقَى جَوْفَهُ، ثُمَّ أُتِيَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهِ تَوْرٌ مِنْ ذَهَبٍ، مَحْشُوًّا إِيمَانًا وَحِكْمَةً، فَحَشَا بِهِ صَدْرَهُ وَلَغَادِيدَهُ – يَعْنِي عُرُوقَ حَلْقِهِ – ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَضَرَبَ بَابًا مِنْ أَبْوَابِهَا فَنَادَاهُ أَهْلُ السَّمَاءِ مَنْ هَذَا؟ فَقَالَ جِبْرِيلُ: قَالُوا: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مَعِيَ مُحَمَّدٌ، قَالَ: وَقَدْ بُعِثَ؟ قَالَ: نَعَمْ، قَالُوا: فَمَرْحَبًا بِهِ وَأَهْلًا، فَيَسْتَبْشِرُ بِهِ أَهْلُ السَّمَاءِ، لاَ يَعْلَمُ أَهْلُ السَّمَاءِ بِمَا يُرِيدُ اللَّهُ بِهِ فِي الأَرْضِ حَتَّى يُعْلِمَهُمْ، فَوَجَدَ فِي السَّمَاءِ الدُّنْيَا آدَمَ، فَقَالَ لَهُ جِبْرِيلُ: هَذَا أَبُوكَ آدَمُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمَ عَلَيْهِ وَرَدَّ عَلَيْهِ آدَمُ، وَقَالَ: مَرْحَبًا وَأَهْلًا بِابْنِي، نِعْمَ الِابْنُ أَنْتَ، فَإِذَا هُوَ فِي السَّمَاءِ الدُّنْيَا بِنَهَرَيْنِ يَطَّرِدَانِ، فَقَالَ: مَا هَذَانِ النَّهَرَانِ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا النِّيلُ وَالفُرَاتُ عُنْصُرُهُمَا، ثُمَّ مَضَى بِهِ فِي السَّمَاءِ، فَإِذَا هُوَ بِنَهَرٍ آخَرَ عَلَيْهِ قَصْرٌ مِنْ لُؤْلُؤٍ وَزَبَرْجَدٍ، فَضَرَبَ يَدَهُ فَإِذَا هُوَ مِسْكٌ أَذْفَرُ، قَالَ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟، قَالَ: هَذَا الكَوْثَرُ الَّذِي خَبَأَ لَكَ رَبُّكَ، ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ، فَقَالَتِ المَلاَئِكَةُ لَهُ مِثْلَ مَا قَالَتْ لَهُ الأُولَى مَنْ هَذَا، قَالَ جِبْرِيلُ: قَالُوا: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قَالُوا: مَرْحَبًا بِهِ وَأَهْلًا، ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ، وَقَالُوا لَهُ مِثْلَ مَا قَالَتِ الأُولَى وَالثَّانِيَةُ، ثُمَّ عَرَجَ بِهِ إِلَى الرَّابِعَةِ، فَقَالُوا لَهُ مِثْلَ ذَلِكَ، ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ الخَامِسَةِ، فَقَالُوا مِثْلَ ذَلِكَ، ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ السَّادِسَةِ، فَقَالُوا لَهُ مِثْلَ ذَلِكَ، ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ، فَقَالُوا لَهُ مِثْلَ ذَلِكَ، كُلُّ سَمَاءٍ فِيهَا أَنْبِيَاءُ قَدْ سَمَّاهُمْ، فَأَوْعَيْتُ مِنْهُمْ إِدْرِيسَ فِي الثَّانِيَةِ، وَهَارُونَ فِي الرَّابِعَةِ، وَآخَرَ فِي الخَامِسَةِ لَمْ أَحْفَظِ اسْمَهُ، وَإِبْرَاهِيمَ فِي السَّادِسَةِ، وَمُوسَى فِي السَّابِعَةِ بِتَفْضِيلِ كَلاَمِ اللَّهِ، فَقَالَ مُوسَى: رَبِّ لَمْ أَظُنَّ أَنْ يُرْفَعَ عَلَيَّ أَحَدٌ، ثُمَّ عَلاَ بِهِ فَوْقَ ذَلِكَ بِمَا لاَ يَعْلَمُهُ إِلَّا اللَّهُ، حَتَّى جَاءَ سِدْرَةَ المُنْتَهَى، وَدَنَا لِلْجَبَّارِ رَبِّ العِزَّةِ، فَتَدَلَّى حَتَّى كَانَ مِنْهُ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى، فَأَوْحَى اللَّهُ فِيمَا أَوْحَى إِلَيْهِ: خَمْسِينَ صَلاَةً عَلَى أُمَّتِكَ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ، ثُمَّ هَبَطَ حَتَّى بَلَغَ مُوسَى، فَاحْتَبَسَهُ مُوسَى، فَقَالَ: يَا مُحَمَّدُ، مَاذَا عَهِدَ إِلَيْكَ رَبُّكَ؟ قَالَ: عَهِدَ إِلَيَّ خَمْسِينَ صَلاَةً كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ، قَالَ: إِنَّ أُمَّتَكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ، فَارْجِعْ فَلْيُخَفِّفْ عَنْكَ رَبُّكَ وَعَنْهُمْ، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ كَأَنَّهُ يَسْتَشِيرُهُ فِي ذَلِكَ، فَأَشَارَ إِلَيْهِ جِبْرِيلُ: أَنْ نَعَمْ إِنْ شِئْتَ، فَعَلاَ بِهِ إِلَى الجَبَّارِ، فَقَالَ وَهُوَ مَكَانَهُ: يَا رَبِّ خَفِّفْ عَنَّا فَإِنَّ أُمَّتِي لاَ تَسْتَطِيعُ هَذَا، فَوَضَعَ عَنْهُ عَشْرَ صَلَوَاتٍ ثُمَّ رَجَعَ إِلَى مُوسَى، فَاحْتَبَسَهُ فَلَمْ يَزَلْ يُرَدِّدُهُ مُوسَى إِلَى رَبِّهِ حَتَّى صَارَتْ إِلَى خَمْسِ صَلَوَاتٍ، ثُمَّ احْتَبَسَهُ مُوسَى عِنْدَ الخَمْسِ، فَقَالَ: يَا مُحَمَّدُ وَاللَّهِ لَقَدْ رَاوَدْتُ بَنِي إِسْرَائِيلَ قَوْمِي عَلَى أَدْنَى مِنْ هَذَا فَضَعُفُوا فَتَرَكُوهُ، فَأُمَّتُكَ أَضْعَفُ أَجْسَادًا وَقُلُوبًا وَأَبْدَانًا وَأَبْصَارًا وَأَسْمَاعًا فَارْجِعْ فَلْيُخَفِّفْ عَنْكَ رَبُّكَ، كُلَّ ذَلِكَ يَلْتَفِتُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ لِيُشِيرَ عَلَيْهِ، وَلاَ يَكْرَهُ ذَلِكَ جِبْرِيلُ، فَرَفَعَهُ عِنْدَ الخَامِسَةِ، فَقَالَ: يَا رَبِّ إِنَّ أُمَّتِي ضُعَفَاءُ أَجْسَادُهُمْ وَقُلُوبُهُمْ وَأَسْمَاعُهُمْ وَأَبْصَارُهُمْ وَأَبْدَانُهُمْ فَخَفِّفْ عَنَّا، فَقَالَ الجَبَّارُ: يَا مُحَمَّدُ، قَالَ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، قَالَ: إِنَّهُ لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، كَمَا فَرَضْتُهُ عَلَيْكَ فِي أُمِّ الكِتَابِ، قَالَ: فَكُلُّ حَسَنَةٍ بِعَشْرِ أَمْثَالِهَا، فَهِيَ خَمْسُونَ فِي أُمِّ الكِتَابِ، وَهِيَ خَمْسٌ عَلَيْكَ، فَرَجَعَ إِلَى مُوسَى، فَقَالَ: كَيْفَ فَعَلْتَ؟ فَقَالَ: خَفَّفَ عَنَّا، أَعْطَانَا بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، قَالَ مُوسَى: قَدْ وَاللَّهِ رَاوَدْتُ بَنِي إِسْرَائِيلَ عَلَى أَدْنَى مِنْ ذَلِكَ فَتَرَكُوهُ، ارْجِعْ إِلَى رَبِّكَ فَلْيُخَفِّفْ عَنْكَ أَيْضًا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا مُوسَى، قَدْ وَاللَّهِ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي مِمَّا اخْتَلَفْتُ إِلَيْهِ، قَالَ: فَاهْبِطْ بِاسْمِ اللَّهِ قَالَ: وَاسْتَيْقَظَ وَهُوَ فِي مَسْجِدِ الحَرَامِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.