தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1694

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வியார் இறந்தபோது, நாங்கள் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். நான் அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன். (முதலில்) அவர்களில் ஒருவருக்கு அருகில் நான் அமர்ந்தேன். பிறகு மற்றொருவர் வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு எதிரே அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களுடைய புதல்வர் அம்ர் அவர்களிடம் “நீங்கள் (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடுக்கக் கூடாதா? “இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறியிருக்கிறார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். நாங்கள் “பைதாஉ” எனும் இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டத்தைக் கண்டோம். அப்போது “நீங்கள் சென்று இந்த வாகனக் கூட்டத்தார் யார் எனப் பார்த்து வாருங்கள்!” என உமர் (ரலி) அவர்கள் கூறி (என்னை அனுப்பி)னார்கள். நான் (அங்கு சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை நான் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் மீண்டும் ஸுஹைப் (ரலி) அவர்களிடம் சென்று “நீங்கள் புறப்படுங்கள்;இறைநம்பிக்கையாளர்களின் தலைவருடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறினேன்.

பின்னர் (சிறிது நாட்களுக்குப் பின்) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்களிடம் “சகோதரரே! நண்பரே!” எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? “இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! “(எவரோ) ஒருவர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, “குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான்” என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”என்று சொல்லிவிட்டு, “ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது” எனும் (35:18ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுக்கு)ப் போதும்” என்றார்கள்.

இதைக் கூறி முடித்தபோது “அல்லாஹ்வே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் மீதாணையாக! இ(ப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிய)தற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஆட்சேபணை) எதுவும் தெரிவிக்கவில்லை” என (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நாங்கள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய புதல்வி உம்மு அபான் அவர்களின் ஜனாஸாவில் இருந்தோம்”என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பில், அய்யூப் பின் அபீ தமீமா (ரஹ்) மற்றும் இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் (முந்தைய) ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை. ஆயினும், அவ்விருவரின் ஹதீஸே அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது (இந்த) ஹதீஸைவிட முழுமையானதாகும்.

அத்தியாயம்: 11

(முஸ்லிம்: 1694)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، قَالَ

تُوُفِّيَتِ ابْنَةٌ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ بِمَكَّةَ، قَالَ: فَجِئْنَا لِنَشْهَدَهَا، قَالَ: فَحَضَرَهَا ابْنُ عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ، قَالَ: وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا، قَالَ: جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا، ثُمَّ جَاءَ الْآخَرُ فَجَلَسَ إِلَى جَنْبِي، فَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ لِعَمْرِو بْنِ عُثْمَانَ: وَهُوَ مُوَاجِهُهُ، أَلَا تَنْهَى عَنِ الْبُكَاءِ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»

فَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَدْ كَانَ عُمَرُ يَقُولُ بَعْضَ ذَلِكَ، ثُمَّ حَدَّثَ، فَقَالَ: صَدَرْتُ مَعَ عُمَرَ مِنْ مَكَّةَ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ إِذَا هُوَ بِرَكْبٍ تَحْتَ ظِلِّ شَجَرَةٍ، فَقَالَ: اذْهَبْ فَانْظُرْ مَنْ هَؤُلَاءِ الرَّكْبُ؟ فَنَظَرْتُ، فَإِذَا هُوَ صُهَيْبٌ، قَالَ: فَأَخْبَرْتُهُ، فَقَالَ: ادْعُهُ لِي، قَالَ: فَرَجَعْتُ إِلَى صُهَيْبٍ، فَقُلْتُ: ارْتَحِلْ فَالْحَقْ أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَلَمَّا أَنْ أُصِيبَ عُمَرُ، دَخَلَ صُهَيْبٌ يَبْكِي، يَقُولُ: وَا أَخَاهْ وَا صَاحِبَاهْ، فَقَالَ عُمَرُ: يَا صُهَيْبُ أَتَبْكِي عَلَيَّ؟ وَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»

فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَلَمَّا مَاتَ عُمَرُ ذَكَرْتُ ذَلِكَ، لِعَائِشَةَ فَقَالَتْ: يَرْحَمُ اللهُ عُمَرَ، لَا وَاللهِ مَا حَدَّثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللهَ يُعَذِّبُ الْمُؤْمِنَ بِبُكَاءِ أَحَدٍ، وَلَكِنْ قَالَ: «إِنَّ اللهَ يَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» قَالَ: وَقَالَتْ عَائِشَةُ: حَسْبُكُمُ الْقُرْآنُ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]، قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ عِنْدَ ذَلِكَ: وَاللهُ {أَضْحَكَ وَأَبْكَى} [النجم: 43]، قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: فَوَاللهِ مَا قَالَ ابْنُ عُمَرَ مِنْ شَيْءٍ

وحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو: عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، كُنَّا فِي جَنَازَةِ أُمِّ أَبَانَ بِنْتِ عُثْمَانَ وَسَاقَ الْحَدِيثَ، وَلَمْ يَنُصَّ رَفْعَ الْحَدِيثِ عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا نَصَّهُ أَيُّوبُ، وَابْنُ جُرَيْجٍ، وَحَدِيثُهُمَا أَتَمُّ مِنْ حَدِيثِ عَمْرٍو


Muslim-Tamil-1694.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-928,
927,
929.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1550.




மேலும் பார்க்க: புகாரி-1286 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.