தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-259

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக (மிஃராஜ்) இரவில் அழைத்துச் செல்லப்பட்டதும், தொழுகை கடமையாக்கப்பட்டதும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(விண்ணுலகப் பயணத்தின்போது) என்னிடம் கோவேறு கழுதையைவிடச் சிறியதும், கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் எனும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது கால் குளம்பை எடுத்து (எட்டு) வைக்கும். அதிலேறி நான் பைத்துல் மக்திஸ் (ஜெரூசலேம்) இறை ஆலயம் வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்துவிட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்ட போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டுவந்தார். (அதில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.) நான் பால் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல், “இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்” என்று கூறினார்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரச்சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(அவரை அழைத்து வரச்சொல்லி என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது” என்றார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. நான் அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வாழ்த்தி வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி சொன்னார். அப்போது “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப் பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம், அவரை அழைத்து வரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப் பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு சகோதரிகளின் புதல்வர்களான ஈசா பின் மர்யம் (அலை), யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) ஆகியோரை நான் கண்டேன்.அவர்கள் இருவரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தனர்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது “நீங்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். உடனே எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் யூசுஃப் (அலை) அவர்களைக் கண்டேன். (மொத்த) அழகில் பாதி அவர்களுக்கு வழங்கப்பெற்றிருந்தது. அன்னாரும் என்னை வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர் “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம் அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். (இத்ரீஸ் (அலை) அவர்கள் தொடர்பாக) அல்லாஹ், “மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்” (19:57) என்று கூறுகின்றான்.-

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஐந்தாம் வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்துவருமாறு) ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம், அவரை அழைத்துவருமாறு என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் ஹாரூன் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஆறாம் வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர் “முஹம்மத்” என்று பதிலளித்தார் “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் மூசா (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஏழாவது வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் அல்பைத்துல் மஅமூர் (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லத்தில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அ(ந்த இறையில்லத்)தில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் (இறைவனை வணங்கச்) செல்வார்கள். அவர்கள் மறுபடியும் அங்கு நுழைவதில்லை. (புதியவர்களே அடுத்து நுழைவார்கள்.)

பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) “சித்ரத்துல் முன்தஹா” எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச்சென்றார். அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தன. அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றிருந்தன. அல்லாஹ்வின் கட்டளையால் இனம் புரியாத (நிறங்கள்) அதைச் சூழ்ந்து கொண்டபோது (அதன் அமைப்போ முற்றிலும்) மாறிவிட்டது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரித்துக் கூற முடியாது. அப்போது அல்லாஹ் அறிவிக்க வேண்டியச் சிலவற்றை எனக்கு அறிவித்தான். என்மீது இரவிலும் பகலிலும் (நாள் ஒன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான்.

பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் இறங்கிவந்தேன். அப்போது அவர்கள், “உங்கள் சமுதாயத்தாருக்கு உம்முடைய இறைவன் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். “ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க் கடமையாக்கினான்)” என்று நான் பதிலளித்தேன். “உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (உங்கள் சமுதாயத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் இதைத் தாங்கமாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப் பட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று, “என் இறைவா! என் சமுதாயத்தார்மீது (ஐம்பது வேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!” என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து, “(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “உங்கள் சமுதாயத்தார் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்” என்றார்கள். இவ்வாறே நான், என் இறைவனுக்கும் மூசா (அலை) அவர்களுக்குமிடையே திரும்பிச் சென்றுகொண்டிருந்தேன்.

இறுதியாக, “முஹம்மதே! இவை இரவிலும் பகலிலும் (நிறைவேற்ற வேண்டிய) ஐவேளைத் தொழுகைகள் ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நற்பலன்) உண்டு. (நற்பலனில்) இவை ஐம்பது வேளைத் தொழுகை(க்கு ஈடு) ஆகும். ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே, அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்துவிட்டால் அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் (குற்றம்) எதுவும் பதியப்படுவதில்லை. (எண்ணியபடி) அதை அவர் செய்து முடித்துவிட்டால் ஒரு குற்றமாகவே அது பதிவு செய்யப்படுகிறது” என்று கூறினான்.

பின்னர் நான் அங்கிருந்து புறப்பட்டு மூசா (அலை) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அ(ல்லாஹ் கூறிய)தை அவர்களிடம் நான் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்” என்று கூறினார்கள். உடனே நான், “(பல முறை) என் இறைவனிடம் திரும்பிச் சென்றுவிட்டேன். (இன்னும்) அவனிடம் (குறைத்துக் கேட்க) நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறிவிட்டேன்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 1

(முஸ்லிம்: 259)

74 – بَابُ الْإِسْرَاءِ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاوَاتِ، وَفَرْضِ الصَّلَوَاتِ

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«أُتِيتُ بِالْبُرَاقِ، وَهُوَ دَابَّةٌ أَبْيَضُ طَوِيلٌ فَوْقَ الْحِمَارِ، وَدُونَ الْبَغْلِ، يَضَعُ حَافِرَهُ عِنْدَ مُنْتَهَى طَرْفِهِ»، قَالَ: «فَرَكِبْتُهُ حَتَّى أَتَيْتُ بَيْتَ الْمَقْدِسِ»، قَالَ: «فَرَبَطْتُهُ بِالْحَلْقَةِ الَّتِي يَرْبِطُ بِهِ الْأَنْبِيَاءُ»، قَالَ ” ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ، فَصَلَّيْتُ فِيهِ رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجْتُ فَجَاءَنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِإِنَاءٍ مِنْ خَمْرٍ، وَإِنَاءٍ مِنْ لَبَنٍ، فَاخْتَرْتُ اللَّبَنَ، فَقَالَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اخْتَرْتَ الْفِطْرَةَ، ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنَ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: َ قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِآدَمَ، فَرَحَّبَ بِي، وَدَعَا لِي بِخَيْرٍ، ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقِيلَ: مَنَ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِابْنَيْ الْخَالَةِ عِيسَى ابْنِ مَرْيَمَ، وَيَحْيَى بْنِ زَكَرِيَّاءَ، صَلَوَاتُ اللهِ عَلَيْهِمَا، فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ،

ثُمَّ عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنَ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِيُوسُفَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا هُوَ قَدِ اُعْطِيَ شَطْرَ الْحُسْنِ، فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ، ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الرَّابِعَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قَالَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِدْرِيسَ، فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ، قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: {وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا} [مريم: 57]،

ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، قِيلَ: مَنْ هَذَا؟ فَقَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِهَارُونَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَحَّبَ، وَدَعَا لِي بِخَيْرٍ، ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِمُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ، ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ، وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ، ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى، وَإِذَا وَرَقُهَا كَآذَانِ الْفِيَلَةِ، وَإِذَا ثَمَرُهَا كَالْقِلَالِ “، قَالَ: ” فَلَمَّا غَشِيَهَا مِنْ أَمْرِ اللهِ مَا غَشِيَ تَغَيَّرَتْ، فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللهِ يَسْتَطِيعُ أَنْ يَنْعَتَهَا مِنْ حُسْنِهَا، فَأَوْحَى اللهُ إِلَيَّ مَا أَوْحَى، فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلَاةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَنَزَلْتُ إِلَى مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: خَمْسِينَ صَلَاةً، قَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ، فَإِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ، فَإِنِّي قَدْ بَلَوْتُ بَنِي إِسْرَائِيلَ وَخَبَرْتُهُمْ “، قَالَ: ” فَرَجَعْتُ إِلَى رَبِّي، فَقُلْتُ: يَا رَبِّ، خَفِّفْ عَلَى أُمَّتِي، فَحَطَّ عَنِّي خَمْسًا،

فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقُلْتُ: حَطَّ عَنِّي خَمْسًا، قَالَ: إِنَّ أُمَّتَكَ لَا يُطِيقُونَ ذَلِكَ، فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ “، قَالَ: ” فَلَمْ أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى، وَبَيْنَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ حَتَّى قَالَ: يَا مُحَمَّدُ، إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ، لِكُلِّ صَلَاةٍ عَشْرٌ، فَذَلِكَ خَمْسُونَ صَلَاةً، وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا، فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ سَيِّئَةً وَاحِدَةً “، قَالَ: ” فَنَزَلْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ “، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَقُلْتُ: قَدْ رَجَعْتُ إِلَى رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ مِنْهُ


Tamil-259
Shamila-162
JawamiulKalim-238




இந்தக் கருத்தில் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12505 , முஸ்லிம்-259 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.