தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3759

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்றேன். கஅபாவின் நிழலில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் அங்கு சென்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் சிலர் தம் கூடாரங்களைச் சீரமைத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் அம்பெய்து (பயிற்சி எடுத்துக்)கொண்டிருந்தனர். மேலும் சிலர் தம் கால்நடைகள் மேயுமிடத்தில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் “கூட்டுத் தொழுகை நடைபெறப் போகிறது” என அறிவித்தார்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒன்றுகூடினோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்துவிடுவதும் அவர்களுக்கு எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாகவே இருந்தது.

உங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம்மதியான வாழ்வு அதன் ஆரம்பக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற்படும். ஒரு குழப்பம் தோன்றும். அது இன்னொரு குழப்பத்தை எளிதானதாகக் காட்டும்.

பிறகு மற்றோரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், “இதில்தான் என் அழிவு உள்ளது” என்று கூறுவார். பிறகு அந்தக் குழப்பம் விலகிவிடும். பிறகு மற்றொரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், “இதுதான்; இதுதான்” என்பார்.

ஆகவே, (நரக) நெருப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட யார் விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்ற வரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்.

இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதும் நான் அவர்களை நெருங்கி, அல்லாஹ்வின் பெயரால் நான் உங்களிடம் கேட்கிறேன். “இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் தம் கரங்களால் தம் காதுகளையும் உள்ளத்தையும் நோக்கி சைகை செய்துகாட்டி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் காதுகள் கேட்டன; என் உள்ளம் அதை மனனமிட்டது” என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், “இதோ! உங்கள் தந்தையின் சகோதரர் புதல்வர் முஆவியா (ரலி) அவர்கள் (கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கெதிராக நிதியும் படையும் திரட்டி) எங்கள் பொருட்களை எங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணும்படியும் நம்மை நாமே கொலை செய்யும்படியும் எங்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால், அல்லாஹ்வோ, “இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே?” என்று கேட்டேன்.

அதற்கு (பதிலளிக்காமல்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவருக்கு நீ கட்டுப்படு! அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவருக்கு மாறுசெய்துவிடு” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 33

(முஸ்லிம்: 3759)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وقَالَ زُهَيْرٌ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ رَبِّ الْكَعْبَةِ، قَالَ

دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ جَالِسٌ فِي ظِلِّ الْكَعْبَةِ، وَالنَّاسُ مُجْتَمِعُونَ عَلَيْهِ، فَأَتَيْتُهُمْ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَنَزَلْنَا مَنْزِلًا فَمِنَّا مَنْ يُصْلِحُ خِبَاءَهُ، وَمِنَّا مَنْ يَنْتَضِلُ، وَمِنَّا مَنْ هُوَ فِي جَشَرِهِ، إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الصَّلَاةَ جَامِعَةً، فَاجْتَمَعْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” إِنَّهُ لَمْ يَكُنْ نَبِيٌّ قَبْلِي إِلَّا كَانَ حَقًّا عَلَيْهِ أَنْ يَدُلَّ أُمَّتَهُ عَلَى خَيْرِ مَا يَعْلَمُهُ لَهُمْ، وَيُنْذِرَهُمْ شَرَّ مَا يَعْلَمُهُ لَهُمْ، وَإِنَّ أُمَّتَكُمْ هَذِهِ جُعِلَ عَافِيَتُهَا فِي أَوَّلِهَا، وَسَيُصِيبُ آخِرَهَا بَلَاءٌ، وَأُمُورٌ تُنْكِرُونَهَا، وَتَجِيءُ فِتْنَةٌ فَيُرَقِّقُ بَعْضُهَا بَعْضًا، وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ: هَذِهِ مُهْلِكَتِي، ثُمَّ تَنْكَشِفُ وَتَجِيءُ الْفِتْنَةُ، فَيَقُولُ الْمُؤْمِنُ: هَذِهِ هَذِهِ، فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ، وَيُدْخَلَ الْجَنَّةَ، فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ، وَمَنْ بَايَعَ إِمَامًا فَأَعْطَاهُ صَفْقَةَ يَدِهِ، وَثَمَرَةَ قَلْبِهِ، فَلْيُطِعْهُ إِنِ اسْتَطَاعَ، فَإِنْ جَاءَ آخَرُ يُنَازِعُهُ فَاضْرِبُوا عُنُقَ الْآخَرِ “، فَدَنَوْتُ مِنْهُ، فَقُلْتُ لَهُ: أَنْشُدُكَ اللهَ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَأَهْوَى إِلَى أُذُنَيْهِ، وَقَلْبِهِ بِيَدَيْهِ، وَقَالَ: «سَمِعَتْهُ أُذُنَايَ، وَوَعَاهُ قَلْبِي»، فَقُلْتُ لَهُ: هَذَا ابْنُ عَمِّكَ مُعَاوِيَةُ، يَأْمُرُنَا أَنْ نَأْكُلَ أَمْوَالَنَا بَيْنَنَا بِالْبَاطِلِ، وَنَقْتُلَ أَنْفُسَنَا، وَاللهُ يَقُولُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] قَالَ: فَسَكَتَ سَاعَةً، ثُمَّ قَالَ: «أَطِعْهُ فِي طَاعَةِ اللهِ، وَاعْصِهِ فِي مَعْصِيَةِ اللهِ».

– وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ، وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلَاهُمَا عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ


Tamil-3759
Shamila-1844
JawamiulKalim-3437




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.