தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4746

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“மூசா (அலை) (அவர்கள் சில ஞானங்களைக் கற்றுக்கொள்வதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர் “களிர்” அவர்கள்தானா என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு வழக்காடிக் கொண்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்றார்கள்.

அப்போது உபை பின் கஅப் அல்அன் சாரீ (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “அபுத்துஃபைல் அவர்களே! இங்கே வாருங்கள். நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாக வழக்காடிக்கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள்:

(ஆம்;) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: பனூ இஸ்ராயீல் மக்களின் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், “இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)” என்று சொன்னார்கள்.

உடனே மூசா (அலை) அவர்களுக்கு, “இருக்கிறார்; அவர்தான் நம் அடியார் களிர் ஆவார்” என்று அல்லாஹ் (வஹீ) அறிவித்தான்.

அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்க வழி கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கி, “நீர் எந்த இடத்தில் மீனைத் தவற விடுகிறீரோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லும். அங்கு களிரைச் சந்திப்பீர்” என்று அவரிடம் கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய தூரம்வரை (தம் உதவியாளருடன்) நடந்தார்கள். பிறகு தம் ஊழியரிடம் “நமது காலை உணவைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்களின் உதவியாளர், “கவனித்தீர்களா! நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்துவிட்டேன். அதைக் கூறவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான்” என்று கூறினார்.

மூசா (அலை) அவர்கள், “அதுதான் நாம் தேடிவந்த இடம்” என்று தம் உதவியாளரிடம் சொல்ல, இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பின்னர் அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மூசா (அலை) அவர்கள் கடலில் அந்த மீன் ஏற்படுத்திச் சென்ற வழித்தடத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 43

(முஸ்லிம்: 4746)

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ

أَنَّهُ تَمَارَى، هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: هُوَ الْخَضِرُ، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ الْأَنْصَارِيُّ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: يَا أَبَا الطُّفَيْلِ هَلُمَّ إِلَيْنَا، فَإِنِّي قَدْ تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَهَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ؟ فَقَالَ أُبَيٌّ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بَيْنَمَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ لَهُ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ قَالَ مُوسَى لَا، فَأَوْحَى اللهُ إِلَى مُوسَى بَلْ عَبْدُنَا الْخَضِرُ قَالَ: فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ: إِذَا افْتَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَسَارَ مُوسَى مَا شَاءَ اللهُ أَنْ يَسِيرَ، ثُمَّ قَالَ لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا، فَقَالَ فَتَى مُوسَى، حِينَ سَأَلَهُ الْغَدَاءَ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، فَقَالَ مُوسَى لِفَتَاهُ: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا) فَوَجَدَا خَضِرًا. فَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللهُ فِي كِتَابِهِ ” إِلَّا أَنَّ يُونُسَ قَالَ: فَكَانَ يَتَّبِعُ أَثَرَ الْحُوتِ فِي الْبَحْرِ


Tamil-4746
Shamila-2380
JawamiulKalim-4395




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.