தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5349

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

அவதூறு சம்பவமும் அவதூறு கூறியோரின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்பட்டதும்.

 இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், உபை துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென்று அல்லாஹ் (குர்ஆனில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர்.

மேற்கண்ட நால்வரில் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை எனக்கு அறிவித்தனர். அவர்களில் சிலர் வேறுசிலரைவிட ஹதீஸை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் மனனமிட்டுள்ளேன். ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் (நால்வரும்) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கேனும் பயணம்) புறப்பட விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனுல் முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது, எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது.

ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய “ஹிஜாப்” எனும்) “பர்தா” சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.

(அப்பயணத்தின்போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்துத் தூக்கிச் செல்லப் படுவேன். பயணத்தினிடையே அதனுள் நான் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கிவைக்கவும் படுவேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்தபோது, நாங்கள் மதீனாவை நெருங்கியதும் இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். எனது இயற்கைத் தேவையை நான் முடித்துக்கொண்டபின் முகாமை நோக்கி வந்தேன்.

அப்போது (என் கழுத்திலிருந்து யமன் நாட்டு) “ழஃபாரீ” நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிவந்து படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் (ஏற்றிக்) கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கி, நான் பயணம் செய்துவந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண்கள் சிறிதளவு உணவையே உண்பார்கள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோதும் அதை ஒட்டகத்தில் வைத்துக் கட்டியபோதும் அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்து)க்கொண்டு சென்றுவிட்டனர். படை கடந்து சென்ற பிறகு, (காணாமற்போன) கழுத்து மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கு அழைப்பதற்கு யாருமில்லை; பதிலளிப்பதற்கும் எவருமில்லை. எனவே, நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டது. நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னர் (படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்துசேர்ந்தார்.

அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைப் பார்க்கவே அவர் என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு, “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்” என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியுறவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்காலை (தமது காலால்) மிதித்துக்கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை இழுத்துச் செல்லலானார்.

இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நண்பகல் வெயில் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்ட பின்னர் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி) என் விஷயத்தில் அழிந்தவர்கள் அழிந்துபோனார்கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் (அனைவரும்) மதீனா வந்தடைந்தோம். நாங்கள் மதீனா வந்தபின் ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந்தார்கள். இந்த அவதூறு எதுவுமே எனக்குத் தெரியாது.

நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்தபோது) அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள். அவ்வளவுதான். இதுவே எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டுவந்த) அந்தத் தீயசொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்குமுன்) எனக்குத் தெரியாது.

நோயிலிருந்து குணமடைந்தபின் நானும் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த “மனாஸிஉ” (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டுமே இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்தப் பழக்கம் பண்டைய அரபுகளின் பழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அன்று நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூருஹ்ம் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான “(ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்”தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் ஆவார்.

ஆக, (என் உறவினரான) அபூருஹ்மின் மகள் உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் இயற்கைக் கடனை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், “மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான் அவரிடம், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார். “என்ன சொன்னார்?” என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது.

நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அப்போது நான், “என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ளவே அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்(து சேர்ந்)தேன்.

நான் என் தாயாரிடம், “அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், “அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்.

நான் “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!” என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு விடிய விடிய நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன்.

(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வேதஅறிவிப்பு (வஹீ) தாமதமாயிருந்தது.

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களோ, நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார்மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்கள் துணைவியர். அவர்களிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று உசாமா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அலீ பின் அபீதாலிப் அவர்களோ (நபியவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), “அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனரே! பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப்பெண்) பரீராவை அழைத்து, “பரீரா! ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, “தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விவரமும்) வயது(ம்) குறைந்த இளம் பெண் என்பதைத் தவிர, அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரியபடி சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, “முஸ்லிம் சமுதாயமே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி எனக்கு) மனவேதனையை அளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பியோர்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அந்த மனிதரைப் பற்றியும் நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போதுதான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)” என்று கூறினார்கள்.

உடனே (அவ்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால்,அவனது கழுத்தை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அவன் எங்கள் சகோதரர்களான “கஸ்ரஜ்” குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்” என்று கூறினார்கள்.

உடனே கஸ்ரஜ் குலத்தின் தலைவரான சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் (அதற்குமுன்) நல்ல மனிதராகத்தான் இருந்தார். குல மாச்சரியம் அவரை விவரமில்லாமல் பேச வைத்துவிட்டது. அவர் (அவ்ஸ் குலத்தவரான) சஅத் பின் முஆதை நோக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தவறாகச் சொல்லிவிட்டீர். அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியவும் செய்யாது” என்று சொன்னார்.

உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வர் ஆவார். உசைத் (ரலி) அவர்கள் சஅத் பின் உபாதா அவர்களிடம் “நீர்தான் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்சகர்களுக்காக வாதாடுகின்றீர்” என்று சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் அனைவரும் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டேயிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. அடுத்த நாள் இரவும் அழுதுகொண்டிருந்தேன். அப்போதும் என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. அழுகை என் ஈரலைப் பிளந்துவிடுமோ என என் பெற்றோர் எண்ணி (கலங்கி)க்கொண்டிருந்தனர்.

நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்துகொண்டிருந்த போது, அன்சாரிப்பெண் ஒருவர் வந்து என்னிடம் (உள்ளேவர) அனுமதி கோரினார். நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார்.

நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு “வஹீ”யாக அருளப்படாமலேயே இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தபின், ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்துவிட்டு), “ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது, எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. அப்போது நான் என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.

பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், “நானோ வயது குறைந்த இளம்பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய், அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன்.

ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப்போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யஅகூப் – அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன் (அதாவது:) “(இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்” (12:18) என்று (யஅகூப் (அலை) அவர்கள் கூறியதைச்) சொன்னேன்.

பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும், நான் குற்றமற்றவள் என நிச்சயம் அல்லாஹ் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும்,அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வஹீயை (வேதஅறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) அருளத் தொடங்கிவிட்டான்.

உடனே அவர்களுக்கு (வேதஅறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும், அவர்களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்று வழியத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு அருளப்பெற்ற இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, “ஆயிஷா! நற்செய்தி பெற்றுக்கொள். அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான்” என்பதாகவே இருந்தது.

உடனே என் தாயார் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசெல்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் எழுந்து செல்லமாட்டேன். என்னைக் குற்றமற்றவள் என அறிவித்த அல்லாஹ்வையே புகழ்(ந்து அவனுக்கு நன்றி செலுத்து)வேன்” என்று சொன்னேன். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் பத்து வசனங்களை (24:11-20) அருளினான்.

என் குற்றமற்ற நிலை தொடர்பாக வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த வசனங்களை அருளியபோது, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து “மிஸ்தஹ்” அவதூறு கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா (தாய் வழியில்) தமக்கு உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவித் தொகை வழங்கிவந்தார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “உங்களில் செல்வமும் தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ எதுவும் வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்” என்று தொடங்கி, “அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா…” (24:22) என்பது வரையிலான வசனத்தை அருளினான்.

-“அல்லாஹ்வின் வேதத்திலுள்ள வசனங்களிலேயே (இறைமன்னிப்பை) மிகவும் எதிர் பார்க்கவைக்கும் வசனம் இதுதான்” என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிப்பான் பின் மூசா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். “அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் சொன்னார்கள்.

(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றித் தம்முடைய (இன்னொரு) துணைவியான ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். “(ஸைனபே!) நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்? அல்லது பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின்மேல் பழி போடாமல்) நான் பாதுகாத்துக்கொள்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று கூறினார்கள்.

ஸைனப் அவர்கள்தான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபியின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பைக் கொடுத்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (என்னுடன்) மோதிக்கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார்.

அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்குக் கிடைத்த அறிவிப்பாகும்”என்று கூறுகிறார்கள்.

யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“சஅத் பின் உபாதா அவர்களைக் குலமாச்சரியம் விவரமில்லாமல் பேசவைத்துவிட்டது” என்பதற்குப் பகரமாக) “குலமாச்சரியம் அவரை உசுப்பிவிட்டது” என்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.

Book : 49

(முஸ்லிம்: 5349)

10 – بَابٌ فِي حَدِيثِ الْإِفْكِ وَقَبُولِ تَوْبَةِ الْقَاذِفِ

حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الْأَيْلِيُّ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ – قَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا، وقَالَ الْآخَرَانِ: أَخْبَرَنَا – عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، – وَالسِّيَاقُ حَدِيثُ مَعْمَرٍ مِنْ رِوَايَةِ عَبْدٍ وَابْنِ رَافِعٍ – قَالَ يُونُسُ وَمَعْمَرٌ جَمِيعًا: عَنِ الزُّهْرِيِّ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ وَعُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ حَدِيثِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ قَالَ لَهَا أَهْلُ الْإِفْكِ مَا قَالُوا: فَبَرَّأَهَا اللهُ مِمَّا قَالُوا، وَكُلُّهُمْ حَدَّثَنِي طَائِفَةً مِنْ حَدِيثِهَا، وَبَعْضُهُمْ كَانَ أَوْعَى لِحَدِيثِهَا مِنْ بَعْضٍ، وَأَثْبَتَ اقْتِصَاصًا، وَقَدْ وَعَيْتُ عَنْ كُلِّ وَاحِدٍ مِنْهُمُ الْحَدِيثَ الَّذِي حَدَّثَنِي، وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا، ذَكَرُوا، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ سَفَرًا، أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ. قَالَتْ عَائِشَةُ: فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا، فَخَرَجَ فِيهَا سَهْمِي، فَخَرَجْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَلِكَ بَعْدَمَا أُنْزِلَ الْحِجَابُ، فَأَنَا أُحْمَلُ فِي هَوْدَجِي، وَأُنْزَلُ فِيهِ مَسِيرَنَا حَتَّى إِذَا فَرَغَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوِهِ، وَقَفَلَ، وَدَنَوْنَا مِنَ الْمَدِينَةِ، آذَنَ لَيْلَةً بِالرَّحِيلِ فَقُمْتُ حِينَ آذَنُوا بِالرَّحِيلِ، فَمَشَيْتُ حَتَّى جَاوَزْتُ الْجَيْشَ، فَلَمَّا قَضَيْتُ مِنْ شَأْنِي أَقْبَلْتُ إِلَى الرَّحْلِ، فَلَمَسْتُ صَدْرِي فَإِذَا عِقْدِي مِنْ جَزْعِ ظَفَارِ قَدِ انْقَطَعَ، فَرَجَعْتُ فَالْتَمَسْتُ عِقْدِي فَحَبَسَنِي ابْتِغَاؤُهُ وَأَقْبَلَ الرَّهْطُ الَّذِينَ كَانُوا يَرْحَلُونَ لِي فَحَمَلُوا هَوْدَجِي فَرَحَلُوهُ عَلَى بَعِيرِيَ الَّذِي كُنْتُ أَرْكَبُ وَهُمْ يَحْسِبُونَ أَنِّي فِيهِ، قَالَتْ: وَكَانَتِ النِّسَاءُ إِذْ ذَاكَ خِفَافًا، لَمْ يُهَبَّلْنَ وَلَمْ يَغْشَهُنَّ اللَّحْمُ، إِنَّمَا يَأْكُلْنَ الْعُلْقَةَ مِنَ الطَّعَامِ، فَلَمْ يَسْتَنْكِرِ الْقَوْمُ ثِقَلَ الْهَوْدَجِ حِينَ رَحَلُوهُ وَرَفَعُوهُ، وَكُنْتُ جَارِيَةً حَدِيثَةَ السِّنِّ، فَبَعَثُوا الْجَمَلَ وَسَارُوا، وَوَجَدْتُ عِقْدِي بَعْدَمَا اسْتَمَرَّ الْجَيْشُ، فَجِئْتُ مَنَازِلَهُمْ وَلَيْسَ بِهَا دَاعٍ وَلَا مُجِيبٌ، فَتَيَمَّمْتُ مَنْزِلِي الَّذِي كُنْتُ فِيهِ، وَظَنَنْتُ أَنَّ الْقَوْمَ سَيَفْقِدُونِي فَيَرْجِعُونَ إِلَيَّ، فَبَيْنَا أَنَا جَالِسَةٌ  فِي مَنْزِلِي غَلَبَتْنِي عَيْنِي فَنِمْتُ، وَكَانَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ السُّلَمِيُّ ثُمَّ الذَّكْوَانِيُّ قَدْ عَرَّسَ مِنْ وَرَاءِ الْجَيْشِ فَادَّلَجَ، فَأَصْبَحَ عِنْدَ مَنْزِلِي فَرَأَى سَوَادَ إِنْسَانٍ نَائِمٍ، فَأَتَانِي فَعَرَفَنِي حِينَ رَآنِي، وَقَدْ كَانَ يَرَانِي قَبْلَ أَنْ يُضْرَبَ الْحِجَابُ عَلَيَّ، فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ عَرَفَنِي، فَخَمَّرْتُ وَجْهِي بِجِلْبَابِي، وَوَاللهِ مَا يُكَلِّمُنِي كَلِمَةً وَلَا سَمِعْتُ مِنْهُ كَلِمَةً غَيْرَ اسْتِرْجَاعِهِ، حَتَّى أَنَاخَ رَاحِلَتَهُ، فَوَطِئَ عَلَى يَدِهَا فَرَكِبْتُهَا، فَانْطَلَقَ يَقُودُ بِيَ الرَّاحِلَةَ، حَتَّى أَتَيْنَا الْجَيْشَ، بَعْدَمَا نَزَلُوا مُوغِرِينَ فِي نَحْرِ الظَّهِيرَةِ، فَهَلَكَ مَنْ هَلَكَ فِي شَأْنِي، وَكَانَ الَّذِي تَوَلَّى كِبْرَهُ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ، فَقَدِمْنَا الْمَدِينَةَ فَاشْتَكَيْتُ، حِينَ قَدِمْنَا الْمَدِينَةَ شَهْرًا، وَالنَّاسُ يُفِيضُونَ فِي قَوْلِ أَهْلِ الْإِفْكِ، وَلَا أَشْعُرُ بِشَيْءٍ مِنْ ذَلِكَ، وَهُوَ يَرِيبُنِي فِي وَجَعِي أَنِّي لَا أَعْرِفُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللُّطْفَ، الَّذِي كُنْتُ أَرَى مِنْهُ حِينَ أَشْتَكِي، إِنَّمَا يَدْخُلُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُسَلِّمُ، ثُمَّ يَقُولُ: «كَيْفَ تِيكُمْ؟» فَذَاكَ يَرِيبُنِي ، وَلَا أَشْعُرُ بِالشَّرِّ، حَتَّى خَرَجْتُ بَعْدَمَا نَقَهْتُ وَخَرَجَتْ مَعِي أُمُّ مِسْطَحٍ قِبَلَ الْمَنَاصِعِ، وَهُوَ مُتَبَرَّزُنَا، وَلَا نَخْرُجُ إِلَّا لَيْلًا إِلَى لَيْلٍ وَذَلِكَ قَبْلَ أَنْ نَتَّخِذَ الْكُنُفَ قَرِيبًا مِنْ بُيُوتِنَا، وَأَمْرُنَا أَمْرُ الْعَرَبِ الْأُوَلِ فِي التَّنَزُّهِ، وَكُنَّا نَتَأَذَّى بِالْكُنُفِ أَنْ نَتَّخِذَهَا عِنْدَ بُيُوتِنَا، فَانْطَلَقْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ، وَهِيَ بِنْتُ أَبِي رُهْمِ بْنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَأُمُّهَا ابْنَةُ صَخْرِ بْنِ عَامِرٍ، خَالَةُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَابْنُهَا مِسْطَحُ بْنُ أُثَاثَةَ بْنِ عَبَّادِ بْنِ الْمُطَّلِبِ، فَأَقْبَلْتُ أَنَا وَبِنْتُ أَبِي رُهْمٍ قِبَلَ بَيْتِي، حِينَ فَرَغْنَا مِنْ شَأْنِنَا، فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِي مِرْطِهَا، فَقَالَتْ: تَعِسَ مِسْطَحٌ فَقُلْتُ لَهَا: بِئْسَ مَا قُلْتِ، أَتَسُبِّينَ رَجُلًا قَدْ شَهِدَ بَدْرًا، قَالَتْ: أَيْ هَنْتَاهْ أَوْ لَمْ تَسْمَعِي مَا قَالَ؟ قُلْتُ: وَمَاذَا قَالَ؟ قَالَتْ: فَأَخْبَرَتْنِي بِقَوْلِ أَهْلِ الْإِفْكِ فَازْدَدْتُ مَرَضًا إِلَى مَرَضِي، فَلَمَّا رَجَعْتُ إِلَى بَيْتِي، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَلَّمَ ثُمَّ قَالَ: «كَيْفَ تِيكُمْ؟» قُلْتُ: أَتَأْذَنُ لِي أَنْ آتِيَ أَبَوَيَّ؟ قَالَتْ: وَأَنَا حِينَئِذٍ أُرِيدُ أَنْ أَتَيَقَّنَ الْخَبَرَ مِنْ قِبَلِهِمَا، فَأَذِنَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ أَبَوَيَّ فَقُلْتُ لِأُمِّي: يَا أُمَّتَاهْ مَا يَتَحَدَّثُ النَّاسُ؟  فَقَالَتْ: يَا بُنَيَّةُ هَوِّنِي عَلَيْكِ فَوَاللهِ لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ قَطُّ وَضِيئَةٌ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا، وَلَهَا ضَرَائِرُ، إِلَّا كَثَّرْنَ عَلَيْهَا، قَالَتْ قُلْتُ: سُبْحَانَ اللهِ وَقَدْ تَحَدَّثَ النَّاسُ بِهَذَا؟ قَالَتْ: فَبَكَيْتُ تِلْكَ اللَّيْلَةَ حَتَّى أَصْبَحْتُ لَا يَرْقَأُ لِي دَمْعٌ وَلَا أَكْتَحِلُ بِنَوْمٍ، ثُمَّ أَصْبَحْتُ أَبْكِي، وَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأُسَامَةَ بْنَ زَيْدٍ حِينَ اسْتَلْبَثَ الْوَحْيُ، يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، قَالَتْ فَأَمَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ فَأَشَارَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالَّذِي يَعْلَمُ مِنْ بَرَاءَةِ أَهْلِهِ، وَبِالَّذِي يَعْلَمُ فِي نَفْسِهِ لَهُمْ مِنَ الْوُدِّ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ هُمْ أَهْلُكَ وَلَا نَعْلَمُ إِلَّا خَيْرًا، وَأَمَّا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، فَقَالَ: لَمْ يُضَيِّقِ اللهُ عَلَيْكَ وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَإِنْ تَسْأَلِ الْجَارِيَةَ تَصْدُقْكَ، قَالَتْ: فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِيرَةَ فَقَالَ: «أَيْ بَرِيرَةُ هَلْ رَأَيْتِ مِنْ شَيْءٍ يَرِيبُكِ مِنْ عَائِشَةَ؟» قَالَتْ لَهُ بَرِيرَةُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنْ رَأَيْتُ عَلَيْهَا أَمْرًا قَطُّ أَغْمِصُهُ عَلَيْهَا، أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ، تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ، قَالَتْ: فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللهِ بْنِ أُبَيٍّ ابْنِ سَلُولَ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: «يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ قَدْ بَلَغَ أَذَاهُ فِي أَهْلِ  بَيْتِي فَوَاللهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلَّا خَيْرًا، وَلَقَدْ ذَكَرُوا رَجُلًا مَا عَلِمْتُ عَلَيْهِ إِلَّا خَيْرًا، وَمَا كَانَ يَدْخُلُ عَلَى أَهْلِي إِلَّا مَعِي» فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ الْأَنْصَارِيُّ، فَقَالَ: أَنَا أَعْذِرُكَ مِنْهُ، يَا رَسُولَ اللهِ إِنْ كَانَ مِنَ الْأَوْسِ ضَرَبْنَا عُنُقَهُ وَإِنْ كَانَ مِنْ إِخْوَانِنَا الْخَزْرَجِ أَمَرْتَنَا فَفَعَلْنَا أَمْرَكَ، قَالَتْ: فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ وَهُوَ سَيِّدُ الْخَزْرَجِ، وَكَانَ رَجُلًا صَالِحًا، وَلَكِنِ اجْتَهَلَتْهُ الْحَمِيَّةُ، فَقَالَ لِسَعْدِ بْنِ مُعَاذٍ: كَذَبْتَ لَعَمْرُ اللهِ لَا تَقْتُلُهُ، وَلَا تَقْدِرُ عَلَى قَتْلِهِ فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ – وَهُوَ ابْنُ عَمِّ سَعْدِ بْنِ مُعَاذٍ -، فَقَالَ لِسَعْدِ بْنِ عُبَادَةَ: كَذَبْتَ لَعَمْرُ اللهِ لَنَقْتُلَنَّهُ فَإِنَّكَ مُنَافِقٌ تُجَادِلُ عَنِ الْمُنَافِقِينَ فَثَارَ الْحَيَّانِ الْأَوْسُ وَالْخَزْرَجُ حَتَّى هَمُّوا أَنْ يَقْتَتِلُوا وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمٌ عَلَى الْمِنْبَرِ، فَلَمْ يَزَلْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَفِّضُهُمْ حَتَّى سَكَتُوا وَسَكَتَ، قَالَتْ: وَبَكَيْتُ يَوْمِي ذَلِكَ لَا يَرْقَأُ لِي دَمْعٌ وَلَا أَكْتَحِلُ بِنَوْمٍ، ثُمَّ بَكَيْتُ لَيْلَتِي الْمُقْبِلَةَ لَا يَرْقَأُ لِي دَمْعٌ وَلَا أَكْتَحِلُ بِنَوْمٍ وَأَبَوَايَ يَظُنَّانِ أَنَّ الْبُكَاءَ فَالِقٌ كَبِدِي ، فَبَيْنَمَا هُمَا جَالِسَانِ عِنْدِي وَأَنَا أَبْكِي اسْتَأْذَنَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَأَذِنْتُ لَهَا فَجَلَسَتْ تَبْكِي، قَالَتْ: فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَلَّمَ، ثُمَّ جَلَسَ، قَالَتْ: وَلَمْ يَجْلِسْ عِنْدِي مُنْذُ قِيلَ لِي مَا قِيلَ، وَقَدْ لَبِثَ شَهْرًا لَا يُوحَى إِلَيْهِ فِي شَأْنِي بِشَيْءٍ، قَالَتْ: فَتَشَهَّدَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ جَلَسَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ يَا عَائِشَةُ، فَإِنَّهُ قَدْ بَلَغَنِي عَنْكِ كَذَا وَكَذَا، فَإِنْ كُنْتِ بَرِيئَةً، فَسَيُبَرِّئُكِ اللهُ وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللهَ وَتُوبِي إِلَيْهِ، فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبٍ، ثُمَّ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ» قَالَتْ: فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَقَالَتَهُ قَلَصَ دَمْعِي حَتَّى مَا أُحِسُّ مِنْهُ قَطْرَةً، فَقُلْتُ لِأَبِي: أَجِبْ عَنِّي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا قَالَ فَقَالَ: وَاللهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لِأُمِّي: أَجِيبِي عَنِّي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: وَاللهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ لَا أَقْرَأُ كَثِيرًا مِنَ الْقُرْآنِ إِنِّي وَاللهِ لَقَدْ عَرَفْتُ أَنَّكُمْ قَدْ سَمِعْتُمْ بِهَذَا حَتَّى اسْتَقَرَّ فِي نُفُوسِكُمْ وَصَدَّقْتُمْ بِهِ، فَإِنْ قُلْتُ لَكُمْ إِنِّي بَرِيئَةٌ وَاللهُ يَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ لَا تُصَدِّقُونِي بِذَلِكَ، وَلَئِنِ اعْتَرَفْتُ لَكُمْ بِأَمْرٍ وَاللهُ يَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ لَتُصَدِّقُونَنِي وَإِنِّي، وَاللهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلًا إِلَّا كَمَا قَالَ أَبُو يُوسُفَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} [يوسف: 18] قَالَتْ: ثُمَّ تَحَوَّلْتُ فَاضْطَجَعْتُ عَلَى فِرَاشِي، قَالَتْ: وَأَنَا، وَاللهِ حِينَئِذٍ أَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ وَأَنَّ اللهَ مُبَرِّئِي بِبَرَاءَتِي، وَلَكِنْ، وَاللهِ مَا كُنْتُ أَظُنُّ أَنْ يُنْزَلَ فِي شَأْنِي وَحْيٌ يُتْلَى، وَلَشَأْنِي كَانَ أَحْقَرَ فِي نَفْسِي مِنْ أَنْ يَتَكَلَّمَ اللهُ عَزَّ وَجَلَّ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَلَكِنِّي كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللهُ بِهَا، قَالَتْ: فَوَاللهِ مَا رَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجْلِسَهُ، وَلَا خَرَجَ مِنْ أَهْلِ الْبَيْتِ أَحَدٌ حَتَّى أَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَهُ مَا كَانَ يَأْخُذُهُ مِنَ الْبُرَحَاءِ عِنْدَ الْوَحْيِ، حَتَّى إِنَّهُ  لَيَتَحَدَّرُ مِنْهُ مِثْلُ الْجُمَانِ مِنَ الْعَرَقِ، فِي الْيَوْمِ الشَّاتِ، مِنْ ثِقَلِ الْقَوْلِ الَّذِي أُنْزِلَ عَلَيْهِ، قَالَتْ: فَلَمَّا سُرِّيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَضْحَكُ، فَكَانَ أَوَّلَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا أَنْ قَالَ: «أَبْشِرِي يَا عَائِشَةُ أَمَّا اللهُ فَقَدْ بَرَّأَكِ» فَقَالَتْ لِي أُمِّي: قُومِي إِلَيْهِ، فَقُلْتُ: وَاللهِ لَا أَقُومُ إِلَيْهِ، وَلَا أَحْمَدُ إِلَّا اللهَ، هُوَ الَّذِي أَنْزَلَ بَرَاءَتِي، قَالَتْ: فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ} مِنْكُمْ عَشْرَ آيَاتٍ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ هَؤُلَاءِ الْآيَاتِ بَرَاءَتِي، قَالَتْ: فَقَالَ أَبُو بَكْرٍ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحٍ لِقَرَابَتِهِ مِنْهُ وَفَقْرِهِ: وَاللهِ لَا أُنْفِقُ عَلَيْهِ شَيْئًا أَبَدًا بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى} إِلَى قَوْلِهِ: {أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللهُ لَكُمْ} [النور: 22]، قَالَ حِبَّانُ بْنُ مُوسَى: قَالَ عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ: هَذِهِ أَرْجَى آيَةٍ فِي كِتَابِ اللهِ، فَقَالَ أَبُو بَكْرٍ: وَاللهِ إِنِّي لَأُحِبُّ أَنْ يَغْفِرَ اللهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ، وَقَالَ: لَا أَنْزِعُهَا مِنْهُ أَبَدًا، قَالَتْ عَائِشَةُ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرِي «مَا عَلِمْتِ؟ أَوْ مَا رَأَيْتِ؟» فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ أَحْمِي سَمْعِي وَبَصَرِي، وَاللهِ مَا عَلِمْتُ إِلَّا خَيْرًا. قَالَتْ عَائِشَةُ: وَهِيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَصَمَهَا اللهُ بِالْوَرَعِ، وَطَفِقَتْ أُخْتُهَا حَمْنَةُ بِنْتُ جَحْشٍ تُحَارِبُ لَهَا، فَهَلَكَتْ فِيمَنْ هَلَكَ قَالَ الزُّهْرِيُّ: فَهَذَا مَا انْتَهَى إِلَيْنَا مِنْ أَمْرِ هَؤُلَاءِ الرَّهْطِ وقَالَ فِي حَدِيثِ يُونُسَ: احْتَمَلَتْهُ الْحَمِيَّةُ


Tamil-5349
Shamila-2770
JawamiulKalim-4979




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.